சென்னைக்கு சப்ளை செய்ய வனப்பகுதியில் வெட்டி கடத்திய ரூ.1.60 கோடி செம்மரம் பறிமுதல்: 4 பேர் கைது

திருமலை: ஆந்திராவில் மினிலாரி, டிராக்டரில் கடத்திய ரூ.1.60கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா எஸ்பி சித்தார்த்த கவுசிலுக்கு கிடைத்த தகவலின்பேரில் ஜம்மலமடுகு டிஎஸ்பி யஷ்வந்த் தலைமையிலான போலீசார் நேற்று புரோதட்டூர் – யார்ரகுன்ட்லா சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த ஒரு மினிலாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் மினி லாரியை பின்தொடர்ந்து டிராக்டர் மற்றும் ஒரு பைக் வந்தது. போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருப்பதை கண்டு பைக், டிராக்டரை நிறுத்திவிட்டு அதை ஓட்டி வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டிச்சென்று டிராக்டரில் வந்தவரை மடக்கி பிடித்தனர். ஆனால் பைக்கில் வந்தவர் தப்பியோடிவிட்டார்.

சோதனையில் டிராக்டரிலும் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் மினிலாரியில் வந்தவர்கள் துதேகுல பாஷா(42), முகமது ரபி(20), அரவோல்லா ரபி(19) என்பதும், டிராக்டரில் வந்தவர் சிவசாய்(24) என்பதும் தெரிந்தது. இவர்கள் அனைவரும் கூட்டாக நல்லவனப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று செம்மரங்களை வெட்டி ஜெகனன்னா காலனியில் உள்ள துதேகுல பாஷா வீட்டில் பதுக்கி வைத்து பின்னர் சென்னைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரூ.1.60கோடி மதிப்புள்ள 4டன் எடையுள்ள 158 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.31 லட்சம் மதிப்புள்ள மினிலாரி, டிராக்டர், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து துதேகுலபாஷா உள்பட 4பேரையும் கைது செய்தனர். மேலும் இதில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சென்னைக்கு சப்ளை செய்ய வனப்பகுதியில் வெட்டி கடத்திய ரூ.1.60 கோடி செம்மரம் பறிமுதல்: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: