பூந்தமல்லி அருகே ரூ.1.40 கோடி நில மோசடி வாலிபர் அதிரடி கைது

ஆவடி: பூந்தமல்லி அருகே போலி ஆவணம் மூலமாக ஆள்மாறாட்டம் செய்து ரூ.1.40 கோடி நிலமோசடியில் ஈடுபட்ட வாலிபரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் இதேபோல் பலகோடி மதிப்பிலான நில மோசடிகளில் ஈடுபட்டு வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், சங்கர முதலியார் தெருவைச் சேர்ந்தவர் சம்பத் (55). இவர், ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்திருந்தார். அப்புகாரில், எனது 2வது மருமகன் மோகன்ராஜுவின் சொந்த ஊர் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை என்பதால், பூந்தமல்லி பகுதியில் நிலம் வாங்க இடம் தேடினேன். பின்னர் பூந்தமல்லியை சேர்ந்த நிலத்தரகர் கார்த்திக் (45) என்பவர் மூலமாக பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை, வரதராஜபுரத்தில் எம்எம்டிஏ உரிமம் பெற்ற 1980 சதுர அடி நிலத்தை விலை பேசி வாங்கினேன்.

இதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவருக்கு சொந்தமான மேற்கண்ட நிலம் தொடர்பாக ராமகிருஷ்ணன் என்பவரிடம் பொது அதிகாரம் உள்ளது. எனவே, நிலத்தரகர் கார்த்திக் முன்னிலையில், அந்நிலத்தின் பொது அதிகாரம் வைத்திருந்த ராமகிருஷ்ணனிடம் முழுத் தொகையையும் செலுத்தி, அந்நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொண்டேன். தற்போது இந்நிலத்தின் மதிப்பு ரூ.1.40 கோடி. எனினும், நான் வாங்கிய நிலத்தில் பிரச்னை இருப்பதாக பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அங்கு சென்று விசாரித்தபோது, அந்நிலத்தின் உரிமையாளர் சந்திரன் போல் ஆள்மாறாட்டம் செய்து நிலமோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் சம்பத் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், சென்னை கொரட்டூரை சேர்ந்த சரத்பாபு (36), பூந்தமல்லியை சேர்ந்த நிலத்தரகர் கார்த்திக் ஆகிய இருவரும் இணைந்து, போலி ஆவணங்கள் மூலம் பலகோடி மதிப்பிலான நிலமோசடியில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நிலமோசடியில் முக்கிய குற்றவாளியான சரத்பாபுவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், நிலத்தரகர் கார்த்திக்கை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

 

The post பூந்தமல்லி அருகே ரூ.1.40 கோடி நில மோசடி வாலிபர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: