தமிழகத்தில் அனைத்து மத்திய சிறைகளிலும் தொடுதிரை மூலம் வழக்கு விபரங்களை அறியும் வசதி: அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு


மதுரை: அனைத்து மத்திய சிறைகளிலும் வழக்கு விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள தொடுதிரை வசதி செய்ததற்காக தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. தேனியைச் சேர்ந்த ரத்தினம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் சிறை விடுதலை தேதிக்கு பிறகும் சட்டவிரோதமாக 9 மாதம் கூடுதலாக சிறையில் இருந்தார். இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரிக்கப்பட்டபோது உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன்பு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறைத்துறை இயக்குநர் தரப்பில், கைதிகள் தங்களின் வழக்கு விபரங்களை பார்த்து அறிந்து கொள்ள வசதியாக தொடுதிரை இயந்திரம், சென்னை புழல் சிறையில் மட்டுமே முன்பு இருந்தது. இதில் இந்தி, ஆங்கில மொழியில் மட்டும் தகவல்களை பார்க்கலாம். ஆனால் தற்போது கைதிகளின் வசதிக்காக தமிழகத்தில் உள்ள 8 மத்திய சிறைகள், 5 பெண்கள் சிறைகள், புதுக்கோட்டை மாவட்ட சிறையிலும் தொடுதிரை இயந்திரம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. புழல் உள்பட அனைத்து மத்திய சிறைகளிலும் உள்ள தொடு திரை இயந்திரத்தில் தமிழ், ஆங்கிலத்திலும் பார்க்கும் வசதி உள்ளது.

இந்த தொடு திரையில் கைதிகளின் சுயவிபரம், விடுதலை தேதி, வழக்கு விவரங்கள், ஊதியம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இந்த தொடுதிரை இயந்திரம், சிறை கைதிகளுக்கு மிகவும் பயனுள்ளது என்று கூறி தமிழக அரசின் சிறைத்துறையை பாராட்டி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

The post தமிழகத்தில் அனைத்து மத்திய சிறைகளிலும் தொடுதிரை மூலம் வழக்கு விபரங்களை அறியும் வசதி: அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: