திருவேற்காட்டில் கூவம் ஆற்றங்கரையோரம் குடியிருப்புகளை அகற்றுவது ஏற்புடையதல்ல: திருமாவளவன் பேட்டி

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும், நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த குடியிருப்புகள் இருப்பதாக கூறி அகற்றுவதற்காக வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வருவாய்த் துறையினர் இந்தப் பகுதியில் உள்ள வீடுகளை கணக்கெடுத்து அளவீடு செய்யும் பணிகளில் சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த குடியிருப்பு பகுதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி: இங்கு வசிக்கக்கூடிய மக்கள் ஒவ்வொரு நாளும் பீதியிலும், நிம்மதியற்ற முறையில் வாழ்ந்து வருகின்றனர்.

அதிகாரிகள் இந்த குடியிருப்புகளை அகற்ற போகிறார்கள் என அறிவிப்பு வருவதும், மக்கள் பீதிக்கு உள்ளாவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கூவம் ஆற்றங்கரையில் 30 அடி உயரத்தில் இந்த குடியிருப்புகள் அமைந்துள்ளது. சில வீடுகள் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. அதனை அகற்ற மக்கள் முன் வந்துள்ளனர். கரைக்கு மேல் அமைந்துள்ள 300 வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும்.

வெள்ளத்தால் இவர்கள் ஒரு போதும் பாதிக்கப்படவில்லை. பல இடங்களில் ஆற்றின் குறுக்கே பல கார்பரேட் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் கட்டிடம் கட்டியுள்ளன. அவற்றையெல்லாம் சீண்டி பார்க்காத ஆட்சி நிர்வாகம் ஏழை, எளிய மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல. இதனை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்வோம். என்று அவர் தெரிவித்தார்.

The post திருவேற்காட்டில் கூவம் ஆற்றங்கரையோரம் குடியிருப்புகளை அகற்றுவது ஏற்புடையதல்ல: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: