தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவுக்காக 19ம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. எனவே உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை பணியாளர்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த துறையின் 2ம் நிலை அதிகாரிகள், தங்களின் கீழ் வரும் பணியாளர்கள் அனைவரும் வாக்குகளை தவறாமல் செலுத்திவிட்டார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அப்படி இல்லை என்றால், வாக்கு செலுத்தாதவர்களின் தற்செயல் விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பில் ஒரு நாளை கழிப்பதற்கு ஏதுவாக, அலுவலக நடைமுறை 1ம் பிரிவில் அதுசம்பந்தப்பட்ட விளக்கத்தை அவர்கள் அளிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் உள்துறை செயலாளர் அமுதா அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் பொது விடுமுறையை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆனால் அந்த பொது விடுமுறையை வாக்களிக்காத பணியாளர்களுக்கு வழங்க முடியாது என்று உள்துறை செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார்.

இது, தேர்தல் நடத்தை விதிகளுக்கும், அரசியல் சாசனத்திற்கும் முற்றிலும் முரணானது. எந்த உயர் நிலை அதிகாரிகளும், தங்களுக்கு கீழ் வரும் பணியாளர்களை ஓட்டுபோட கட்டாயப்படுத்த முடியாது. யாருக்கும் வாக்கு செலுத்த விரும்பவில்லை என்பதற்கும் 49ஓ (நோட்டா) மூலம் வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் உரிமை வழங்கியுள்ளது. எனவே உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று உள்துறை முதன்மை செயலாளர் அமுதா மீண்டும் ஒரு அலுவலக உத்தரவை பிறப்பித்தார். அதில், இதற்கு முன்பதாக பிறப்பிக்கப்பட்ட அலுவலக உத்தரவில் கூறப்பட்டுள்ள உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக திரும்ப பெறப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: