தண்ணீர் அளவு குறைந்திருக்கும் மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: கொ.ம.தே.க. பொதுச்செயலர் ஈஸ்வரன் கோரிக்கை

சென்னை: தண்ணீர் அளவு குறைந்திருக்கும் மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும் என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதினாலும், தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 90வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தண்ணீர் அளவு குறைந்திருக்கும் மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும் என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். மேட்டூர் அணை தூர்வாரப்பட்டால் 30 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. நீர்வளத்துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொண்டு தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.

120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணை நீர் அளவு தற்போது 53.1 அடி உயரமாகவும், 19.820 டிஎம்சி கொள்ளளவாகவும் உள்ளது. இந்த நிலை நீடித்தால் 12 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உள்ளது. அணைக்கான நீர்வரத்து குறைந்து கொண்டே இருப்பதால் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு நீர் இருப்பைவிட இந்த ஆண்டு 50 சதவீதம் குறைந்தே காணப்படுகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் அணையை தூர்வாரினால் பருவமழை காலங்களில் கூடுதலாக நீரை சேமித்து வைத்துக்கொள்ள முடியும் என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

The post தண்ணீர் அளவு குறைந்திருக்கும் மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: கொ.ம.தே.க. பொதுச்செயலர் ஈஸ்வரன் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: