6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன்: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

சென்னை: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 17வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் 16ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி 18வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை கடந்த மார்ச் 16ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்தது.

தமிழ்நாட்டில் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் அமைக்கப்பட்ட 68,321 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 3,719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை, புதுக்கோட்டை, விழுப்புரத்தில் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது. அரசியல் கட்சியினரின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எந்திரங்களுக்கு சீல்வைக்கப்படுகிறது. சீல்வைக்கப்பட்ட வாக்கு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் கடந்த தேர்தலைவிட வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை தொகுதிகளில் கடந்த தேர்தலைவிட வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது.

 

The post 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன்: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: