போதைப்பொருள் வழக்கில் கைதான ராகுலுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா?.. முக்கிய ஆவணங்கள் சிக்கின..போலீஸ் தீவிர விசாரணை..!!

சென்னை: சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் ராகுல் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். வாட்ஸ் அப் குழு மூலம் பலருக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. கைதான ராகுல் தனது தந்தையின் மீன் வலை கம்பெனியை மேற்பார்வை செய்து வந்ததுடன், நீச்சல் குளங்களை பராமரிக்கும் கெமிக்கல் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

கைதான ராகுல் கடந்த 2 ஆண்டுகளாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைதான ராகுலுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராகுலின் வீட்டில் தனிப்படை போலீஸ் 2 மணி நேரம் சோதனை நடத்தியது. ராகுல் வீட்டில் நடந்த சோதனையில் போதைப்பொருள் விற்பனை தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் சிக்கின.

போதைப்பொருள் விற்பனை தொடர்பாக செல்போனில் ராகுல் அனுப்பிய குறுந்தகவல்கள் பற்றிய ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராகுலிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒருமுறை தாய்லாந்து சென்று வந்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். போதைப்பொருள் விற்பனை தொடர்பான உரையாடல்களை முழுமையாக கண்டறிய ராகுலின் செல்போனை சைபர் கிரைம் லேப்-க்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு தொடர்புகள் குறித்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

போதைப் பொருள் வியாபாரத்தில் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக சாட்டிலைட் போன் பயன்படுத்தி வந்தாரா? எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் ராகுலுக்கு தொடர்பு இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் ராகுலுக்கு தொடர்பு உள்ளதா? என்பதை கண்டறிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

The post போதைப்பொருள் வழக்கில் கைதான ராகுலுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா?.. முக்கிய ஆவணங்கள் சிக்கின..போலீஸ் தீவிர விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: