மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வெடிமருந்துகளை அருகருகே வைத்து கிடங்கில் இறக்கியதே கல்குவாரி விபத்துக்கு காரணம் :எஃப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல்

காரியாபட்டி:விருதுநகர் அருகே காரியாபட்டியில் கல்குவாரி விபத்து எப்படி நடந்தது என்று எஃப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கீழஉப்பிலிக்குண்டு கிராமத்தில் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவது வழக்கம். மேலும், இந்த குவாரியில் வெடிமருந்து இருப்பில் வைக்க குடோன் உள்ளது. இந்த குடோனில் இருந்து சரக்கு வேனில் வெடிமருந்து, குவாரிகளுக்கு ஏற்றி செல்லப்படும். இந்த நிலையில், நேற்று காலை 8 மணியளவில் இரண்டு சிறிய சரக்கு வாகனங்களில் வெடிமருந்து ஏற்றும் பணி நடைபெற்றது. அப்போது உராய்வு காரணமாக வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில், பணியில் ஈடுபட்ட கந்தசாமி, துரை, குருசாமி ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த நிலையில், வெடி விபத்து தொடர்பாக ஆவியூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில்,”மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வெடிமருந்துகளை அருகருகே வைத்து கிடங்கில் இறக்கியதே விபத்துக்கு காரணம். எலெக்ட்ரிக் டெட்டனேட்டர் வேனையும் நைட்ரேட் மிக்சர் வெடிமருந்து வேனையும் அருகருகே நிறுத்தி வெடிமருந்துகளை இறக்கியுள்ளனர். உயர் ரக வெடிமருந்துகளை போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கிடங்கில் இறக்கியுள்ளனர். உயர் ரக வெடிமருந்து இறக்கும் இடத்தில் போதிய கண்காணிப்பு அலுவலர் இல்லை,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில முக்கிய குறிப்புகள்

*விபத்து தொடர்பாக ஏற்கனவே உரிமையாளர்களில் ஒருவரான சேதுவை கைது செய்த போலீஸார், மற்றொரு உரிமையாளரான ராஜ்குமாரையும் கைது செய்துள்ளனர்.

*வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு கல்குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. குடும்பங்களுக்கு ரூ.50,000 ரொக்கமாகவும், ரூ.11.5 லட்சம் காசோலையாகவும் வழங்கப்பட்டது.

*காரியாபட்டி கல்குவாரியில் விருதுநகர் மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குனர் முனியசாமி ஆய்வு நடத்தி வருகிறார். விதிமுறைகளை மீறி குவாரி செயல்படுவதாக கிராம மக்கள் புகார் அளித்த நிலையில் கனிமவளத்துறை ஆய்வு நடத்தி வருகிறது.

*காரியாபட்டி கல்குவாரியை மூடக் கோரி ஆவியூர் கிராம மக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

*கல்குவாரியில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்கள் குழுவும் ஆய்வு நடத்தி வருகிறது. விபத்து ஏற்பட்ட வெடிமருந்தின் தன்மை, எஞ்சிய வெடி மருந்துகளை செயல் இழக்க வைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

The post மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வெடிமருந்துகளை அருகருகே வைத்து கிடங்கில் இறக்கியதே கல்குவாரி விபத்துக்கு காரணம் :எஃப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: