பள்ளிக்கல்வித்துறையை வழிநடத்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

சென்னை: நாளைய பள்ளிக்கல்வியை உருமாற்றவும், வழிநடத்தவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்காலம் கருதி, தொழில்நுட்ப கல்வி மற்றும் கற்கும் வாய்ப்பு என்ற தலைப்பில் காக்னிசன்ட் நிறுவனம் சென்னை அடுத்த சிறுசேரியில் 2 நாள் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

இதனை நேற்று தொடங்கி வைத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: நமது பள்ளிக் கல்வி முறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவில் நம் குழந்தைகளை எப்படி இணைத்துக் கல்வி கற்பிக்க போகிறோம் என்பதை நாம் கவனிக்க வேண்டியது அவசியம். நாம் அறிவுப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதன் மூலம் தமிழ்நாடு உலக அளவில் முன்னணியில் இருக்க முடியும். கடந்த ஆண்டு அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் கையெழுத்திட்ட ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஆண்டில் இந்த தொழில்நுட்பக் கல்வி மற்றும் கற்றல் வாய்ப்பு என்ற திட்டம் தொடங்கியது. முதற்கட்டமாக 12 அரசுப் பள்ளிகள் இதில் ஈடுபடுத்தப்பட்டன. அதன் மூலம் 4,226 மாணவ மாணவியர் பயன்பெற்றனர்.

அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த பயிற்சி பட்டறையின் மூலம் திருச்சி, கோவை, மதுரை மற்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 40 ஆயிரம் மணவ மாணவியர் பயன்பெறும் வகையில் 4 மாவட்டங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. குறிப்பிட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 பள்ளிகளில் இருந்து 25 ஆசிரியர்கள் மற்றும் இந்த திட்டத்தின் முதற்கட்ட ஆசிரியர்களுடன் சேர்த்து 114 ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்த 90க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள். இந்த திட்டம் நாளைய தமிழ்நாட்டுக்கு மிகவும் பயன்தரக்கூடியதாக இருக்கிறது. நாளைய பள்ளிக்கல்வியை உருமாற்றவும் வழி நடத்தவும் இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன், உள்ளிட்ேடார் பங்கேற்றனர்.

The post பள்ளிக்கல்வித்துறையை வழிநடத்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: