மேட்டூரில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வலுத்துள்ளதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழியும் நிலையில், உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று இரவு 7 மணிக்கு 98,000 கனஅடியாக அதிகரித்தது.

இதனால், அங்குள்ள மெயின் அருவி, ஐவர் பாணி பகுதிகளில் பாறைகளை மூழ்கடித்தவாறு பெருக்கெடுத்துள்ள புதுவெள்ளம், மேட்டூர் அணை நோக்கி செல்கிறது. நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை கேட் மூடப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் சதீஸ் நேரில் ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், நடப்பாண்டில் 4வது முறையாக கடந்த 25ம் தேதி மீண்டும் நிரம்பியது. நேற்று முன்தினம் காலை, விநாடிக்கு 25,400 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று இரவு 7 மணிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், நீர் திறப்பும் விநாடிக்கு 75,400 கனஅடியிலிருந்து 1 லட்சத்து 400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம், 3வது நாளாக 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47டி.எம்.சியாகவும் உள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் காவிரி கரையோர மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திரூவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுத்துள்ள வெள்ள அபாய அறிவிப்பில், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,00,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

The post மேட்டூரில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: