நெல்லிக்குப்பம்: அதிமுக நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்த நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு அருகே குழந்தைகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (60). கடலூர் மேற்கு ஒன்றிய அதிமுக விவசாய அணி துணைச் செயலாளர். நடுவீரப்பட்டு அடுத்த கொஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர் வினோத் (40). கடலூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர். இவர்கள் 2 பேருக்கும் சி.என்.பாளையம் ஊராட்சி புத்திரன்குப்பம் பகுதியில் சொந்தமான நிலம் உள்ளது.
இருவரும், இவர்களின் சொந்தமான நிலத்தில் அரசு உரிமத்துடன் செம்மண் குவாரி நடத்தி வந்தார்களாம். அவர்களது சொந்த நிலத்தில் செம்மண் எடுப்பதுடன் இல்லாமல் எல்லை தாண்டி செம்மண் எடுத்தது தொடர்பாக இவர்களுக்குள் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் வினோத்துக்கு சொந்தமான நிலத்தில், கிருஷ்ணமூர்த்தியின் செம்மண் குவாரி பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் செம்மண் வெட்டி எடுப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து வினோத் தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள் வினோத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் கோபால் (36), வினோத் மற்றும் அவரது ஆதரவாளர்களை சரமாரி தாக்கினார். பின்னர் தன்னிடமிருந்த அரசு உரிமத்துடன் கூடிய பிஸ்டல் துப்பாக்கியை கையில் எடுத்துக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் வினோத் புகார் செய்தார். அதன்பேரில் நடுவீரப்பட்டு போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்து கோபாலை தேடி வந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், கோபாலை உடனடியாக போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த பிஸ்டல் துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். கைதான கோபால் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
