பார்வானி: மத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கால்வாயில் வீசிக் கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேசம் மாநிலம் பார்வானி மாவட்டத்தில் வசிக்கும் 7 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். தேடுதல் வேட்டைக்குப் பிறகு அந்தச் சிறுமியின் உடல் அருகில் உள்ள கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சிறுமியின் உறவினரான 17 வயது சிறுவன் தான் இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் கொலை செய்ததாகவும் அந்தச் சிறுவன் ஒப்புக்கொண்டான். இது தொடர்பாக ராஜ்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தச் சிறுவனைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தின் பின்னணி குறித்து பார்வானி மாவட்ட எஸ்பி ஜெகதீஷ் டாவர் கூறுகையில், ‘கடந்த 25ம் தேதி இரவு சிறுமி வீட்டில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது, அந்தச் சிறுவன் அவளைக் கடத்திச் சென்றுள்ளான். இந்திரா சாகர் கால்வாய் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அப்போது வலி தாங்க முடியாமல் சிறுமி சத்தம் போட்டதால், பயந்துபோன அந்தச் சிறுவன் சிறுமியைத் தூக்கி கால்வாயில் வீசிக் கொலை செய்துள்ளான். மீட்கப்பட்ட சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில், அவருக்குக் கடுமையான காயங்கள் இருந்ததும், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்’ என்று போலீசார் தெரிவித்தனர்.
