கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்று டீசல் ஊற்றி எரிப்பு: காதலனுடன், மனைவி கைது

கரூர்: கரூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை பீர் பாட்டிலால் அடித்து கொன்று டீசல் ஊற்றி உடலை எரித்த மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். கரூர் தொழிற்பேட்டை அருகே உள்ள ஆர்.எஸ்.புரம் காட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பாதி எரிந்த நிலையில் ஆண் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள், பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்தவர் கரூர் தொழிற்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார்(47) என்பது தெரியவந்தது. இவர் கரூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதே ஜவுளி நிறுவனத்தில் நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூரை சேர்ந்த ராஜமாணிக்கம்(44) என்பவர் தங்கி சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். செந்தில்குமாருக்கும், ராஜமாணிக்கத்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் செந்தில்குமார் வீட்டுக்கு ராஜமாணிக்கம் அடிக்கடி வந்து சென்றார். அப்போது செந்தில்குமார் மனைவி பாண்டீஸ்வரிக்கும்(47) ராஜமாணிக்கத்துக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த செந்தில்குமார், இருவரையும் கண்டித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், செந்தில்குமாரை கொலை செய்ய கள்ளக்காதல் ஜோடி முடிவு செய்தது.

அதன்படி கடந்த 25ம் தேதி செந்தில்குமாரை சணப்பிரட்டி ஆர்.எஸ்.புதூர் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் இடத்தில் மது அருந்த ராஜமாணிக்கம் அழைத்து சென்றார். மது அருந்தி கொண்டிருக்கும்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்து பீர் பாட்டிலால் செந்தில்குமார் தலையில் ராஜமாணிக்கம் அடித்தார். இதில் சுருண்டு விழுந்து செந்தில்குமார் இறந்தார். பின்னர் தான் வாங்கி வந்திருந்த டீசலை எடுத்து செந்தில்குமார் உடலில் ஊற்றி தீ வைத்து விட்டு ராஜமாணிக்கம் தப்பி சென்றது தெரியவந்தது. அதன்பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜமாணிக்கம், பாண்டீஸ்வரி ஆகியோரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: