போலியான ஆவண எண்ணை காண்பித்து பல கோடி மதிப்புள்ள சொத்துகள் பதிவு செய்துள்ள டிஐஜி கவிதாராணி மீது வழக்குபதிவு

சென்னை: சார்பதிவாளர் அலுவலகத்தில் எந்த ஒரு முன் ஆவணமும் இல்லாமல் போலியான ஆவண எண்ணை காண்பித்து பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை பதிவு செய்துள்ள பதிவுத்துறை டிஐஜி கவிதாராணி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற மருத்துவர் பியூலா லிலின் நல்லதம்பி (76). என்பவருக்கு சொந்தமான அண்ணாநகர் முதல் தெருவில் உள்ள 2195 சதுரடி கொண்ட ரூ.2.5 கோடி மதிப்புள்ள சொத்தினை ஹரிநாத், சேஷாத்திரி ஆகியோர் சேர்ந்து போலியான ஆவண எண்ணைக் காட்டி, மோசடியாக பதிவு செய்து வங்கியில் அடமானம் வைத்து சொத்தினை அபகரித்துள்ளனர். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு நில மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் புலன் விசாரணை நடத்தி வந்தனர்.

வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து விசாரணையை துரிதப்படுத்தி நடவடிக்கை எடுக்கும்படி சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் வழிகாட்டுதலின் படி தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் போலி ஆவணங்களை தயார் செய்ய மூளையாக இருந்து செயல்பட்டு, வங்கியில் அடமானம் வைத்த திருவான்மியூர் பகுதியை சேர்ந்த ஹரிநாத் (36), உடந்தையாக இருந்த மந்தைவெளியை சேர்ந்த சேஷாத்திரி (37) ஆகியோரை அக்டோபர் 8ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

மேலும் செல்லம்மாள் என்பவர் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி இறந்த நிலையில் முனியாண்டிக்கு விற்றதாக கூறி அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அடமான ஆவணத்தை கிரைய முன் ஆவணமாக காண்பித்து முனியாண்டி என்பவர் குருவுக்கு ஆவணமாக வில்லிவாக்கம் சார்பதிவாளர் மூலம் டிஐஜி கவிதாராணி பதிவு செய்து கொடுத்தது தெரியவந்தது. அந்த ஆவணத்தை வைத்து இந்தியன் வங்கியில் பலகோடி கடன் வாங்கியுள்ளனர். சார்பதிவாளர் மற்றும் டிஐஜி கவிதா ராணிக்கு பல லட்சம் பணம் கொடுத்து பதிவு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சார்பதிவாளர் அலுவலகத்தில் எந்த ஒரு முன் ஆவணப்பதிவே இல்லாமல் போலியான ஆவண எண்ணை காண்பித்து பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை பதிவு செய்துள்ள கவிதாராணி மீது காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரைணையை தீவிரப்படுத்தியுள்ளது. முன் ஆவணம் இல்லாமல் பத்திரம்பதிவு செய்யக்கூடாது என்று சமீபத்தில் பதிவுத்துறை ஐஜி ஆலிவர் தினேஷ் பொன்ராஜ் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில் முன் ஆவணம் இல்லாமல் பதிவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

ஆனால் முன் ஆவணம் மட்டும் இல்லாமல் வேறு போலியான முன் ஆவண எண்ணை வைத்து தற்போது ஆவணம் பதிவு செய்து, வங்கியையும் ஏமாற்றியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கவிதாராணி மீது ஏற்கனவே கோடம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலத்தில் பணியில் இருந்த போது பொதுப்பணித்துறை அரசு நிலத்தை தனியாருக்கு பதிவு செய்து கொடுத்தை உயர்நீதிமன்றம் தலையிட்டு கவிதாராணி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு அந்த வழக்கிலும் குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: