கிருஷ்ணகிரி, ஜன.26: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடியரசு தினத்தையொட்டி இன்று காலை கலெக்டர் தேசிய கொடியேற்றி வைத்து, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரியும் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, போலீசாருக்கு பதக்கங்களை வழங்குகிறார். இவ்விழாவையொட்டி முன்னெச்சரிக்கையாக 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று (26ம்தேதி) நாட்டின் 77வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கு, மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் தலைமை வகித்து, காலை 8.05 மணிக்கு தேசிய கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரியும், அரசுத்துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், போலீசாருக்கு பதக்கங்களை வழங்குகிறார். தொடர்ந்து மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த விழாவில் அனைத்து துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் செய்துள்ளனர். குடியரசு தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டிற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. முன்னதாக, விளையாட்டு வீரர்கள் மற்றும் நடை பயிற்சிக்கு வந்தவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் மைதானம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மற்றும் மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்கள், ஓசூர், சாமல்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் என வழிபாட்டு தலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக மாநில எல்லையான அத்திப்பள்ளி, நேரலகிரி, வேப்பனஹள்ளி, குருவிநாயனப்பள்ளி, வரமலைகுண்டா உள்ளிட்ட இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் பலத்த சோதனைக்கு பின்னர் மாவட்டத்திற்குள் வாகனங்களை அனுமதிக்கின்றனர். இந்த குடியரசு தினவிழாவை முன்னிட்டு, மாவட்ட எஸ்பி தங்கதுரை உத்தரவின் படி, சுமார் 550 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
