ஓசூர், ஜன.21: ஓசூர் அருகே தாயப்பா ஏரியில் ரசாயன கழிவுகளுடன் குப்பை கழிவுகள் குவிந்து கிடப்பதால், சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 1வது வார்டுக்குட்பட்ட உப்கார் ராயல் கார்டன் பகுதியில் தாயப்பா ஏரி அமைந்துள்ளது. மழைக்காலத்தின்போது சுற்றுப்புற பகுதியில் சேகரமாகும் தண்ணீர் பெருக்கெடுத்து வந்து ஏரியில் தேங்குவது வாடிக்கை. இதனால், சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீராதாரமாக விளங்கி வந்தது. இந்நிலையில், அருகிலுள்ள சிப்காட் பகுதியில் இயங்கி வரும் சிறு குறு நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள், நேரடியாக ஏரியில் கலந்து தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது.
இதனால், கடும் துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த ஏரி பகுதி வழியாக தான் லேஅவுட் பகுதிக்கு செல்ல வேண்டும். லேஅவுட் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் மாசுபட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலர்ஜி, முடி உதிர்தல் உள்ளிட்ட நோய் பாதிப்புகளால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து ஓசூர் மாநகராட்சி கமிஷனர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த ஏரியை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்றனர்.
