போச்சம்பள்ளி, ஜன.12: போச்சம்பள்ளி வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய வாரச்சந்தையாக போச்சம்பள்ளி வாரச்சந்தை உள்ளது. வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை இங்கு வாரச்சந்தை கூடுகிறது. இங்கு காய்கறிகள் மட்டுமின்றி ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகை வரும் 15ம்தேதி கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று ஆடுகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
தீபாவளி, ரம்ஜான், பொங்கல், ஆடிபண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களை குறிவைத்து கிராம மக்கள் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். கிராமப்புறங்களில் சிலர் தீபாவளி, பொங்கல் பண்டிகை முன்னிட்டு கறி சீட்டு நடத்துவது வழக்கம். அதற்காக சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி சென்று அந்த ஆடுகளை வெட்டி பங்கு போட்டு கொள்கின்றனர். இதை குறித்து வைத்து போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு அதிகளவில் ஆடுகள், நாட்டு கோழிகளை உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆடுகளை வாங்கி செல்ல வேலூர், தர்மபுரி, மேட்டூர், சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர்.
செம்மறி ஆடு, வெள்ளாடு என 2000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. அதிகாலை 5 மணிக்கே விற்பனை களை கட்டியது. பண்டிகை இல்லாத நாட்களில் வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு அதிகபட்சமாக ரூ.12,000 வரை விற்பனை ஆகும். பொங்கலை முன்னிட்டு நேற்று ரூ.15,000 வரை விற்பனையானது. அதிகபட்சமாக ஒரு ஜோடி கிடா ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. எடையை பொறுத்து ஆடுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் நாட்டு கோழிகள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வரும் 17ம்தேதி காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெரும்பாலான வீடுகளில் அசைவம் சமைப்பது வழக்கம். அதேபோல் கிராமங்களில் இஷ்ட தெய்வங்களுக்கு ஆடுகளை வெட்டி பங்கிட்டு கறியை பிரித்து கொள்வார்கள். இதனால் கறிக்கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், சந்தையில் ஆடுகளை வாங்கி சென்று கூறு போட்டு கறியை பகிர்ந்து கொள்வார்கள். அதனால், சந்தையில் ஆடுகள், கோழிகள் விற்பனை களைகட்டியது. நேற்றைய சந்தையில் ரூ.2 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றது, என்றனர். பண்டிகையையொட்டி நடந்த சந்தையால் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தலைமை காவலர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
