புதுடெல்லி: இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இடைக்கால அரசுத் தலைவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டம் காரணமாக ஆட்சி கவிழ்ந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதற்கிடையே கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததுடன், வருகிற பிப்ரவரி 12ம் தேதி நடக்கவுள்ள தேர்தலில் போட்டியிட அவாமி லீக் கட்சிக்கு தடையும் விதிக்கப்பட்டது. இந்த சூழலில் வங்கதேசத்தில் தேர்தல் பிரசாரம் தொடங்கிய நிலையில், ஷேக் ஹசீனா டெல்லியில் இருந்து ஆடியோ மூலம் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். டெல்லியில் பத்திரிகையாளர்கள் மன்றத்தில் ஒலிபரப்பப்பட்ட அந்த ஆடியோ பதிவில், இடைக்கால வங்கதேச அரசுத் தலைவர் முகமது யூனுசை ‘கொலைகார பாசிஸ்ட்’ மற்றும் ‘துரோகி’ என்று ஷேக் ஹசீனா கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் அவர், ‘தற்போது வங்கதேசத்தில் தீவிரவாதம் மற்றும் சட்டவிரோத செயல்கள் தலைவிரித்தாடுகிறது. சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. நாட்டின் இறையாண்மையை வெளிநாட்டு சக்திகளிடம் அடகு வைக்கும் செயலில் யூனுஸ் ஈடுபட்டுள்ளார். ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்றால் தற்போதைய இடைக்கால அரசு உடனடியாக விலக வேண்டும். கடந்த ஓராண்டாக நடந்த வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்த வேண்டும்’ என்று அவர் ஆவேசமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
வங்கதேச அரசு மீது நடிகை பாய்ச்சல்
இந்தியாவில் வரும் பிப்ரவரி 7ம் தேதி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களைக் கூறி இந்தத் தொடரில் பங்கேற்க முடியாது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஐசிசி நிராகரித்ததுடன், வங்கதேசம் பங்கேற்காவிட்டால் ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தது. வங்கதேச அரசின் இந்தத் தன்னிச்சையான முடிவால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்குப் பெரும் நிதி இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்துப் பேசிய வங்கதேசத்தின் பிரபல நடிகையும் இயக்குனருமான ரோகியா பிராச்சி, ‘இந்திய எதிர்ப்பு உணர்வை ஓர் அரசியல் ஆயுதமாக வங்கதேச அரசு பயன்படுத்துகிறது. இது பொதுமக்களின் கருத்து கிடையாது. 1971ம் ஆண்டு விடுதலைப் போரில் இந்தியா செய்த உதவியை நாம் நினைவில் கொள்ள வேண்டும்’ என்று ஆவேசமாக கூறினார்.
