அட்லாண்டா: குடும்பத் தகராறில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள லாரன்ஸ்வில் நகரின் ப்ரூக் ஐவி கோர்ட் பகுதியில் இருந்த ஒரு வீட்டில், நேற்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தனர். தகவலறிந்த போலீசார் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மீமு டோக்ரா (43), கவுரவ் குமார் (33), நிதி சந்தர் (37) மற்றும் ஹரிஷ் சந்தர் (38) ஆகிய 4 பேரின் சடலங்களை மீட்டனர்.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த மீமு டோக்ராவின் கணவரான விஜய் குமார் (51) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை, கொலை முயற்சி, கொடூரமாக தாக்குதல் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்பத் தகராறே இந்த கொடூரத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்தபோது வீட்டில் இருந்த 7, 9 மற்றும் 12 வயதுடைய மூன்று குழந்தைகள், சமயோசிதமாக ஒரு அலமாரியில் ஒளிந்து கொண்டு தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.
அவர்களில் 12 வயது சிறுவன் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் அளித்ததால், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழந்தைகள் மூவரும் காயமின்றி மீட்கப்பட்டு உறவினர் ஒருவரின் பாதுகாப்பில் உள்ளனர். அட்லாண்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், ‘இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்’ என்றும் தெரிவித்துள்ளது.
