ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரிய வழக்கில் 27ம் தேதி தீர்ப்பு: சென்னை ஐகோர்ட் வழங்குகிறது

சென்னை: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்று வழங்குவது தொடர்பான வழக்கில் வரும் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கோரி படத்தை தயாரித்த நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக தணிக்கை சான்று வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து சென்சார் போர்டு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு ஜனவரி 20ம் தேதி விசாரித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கி அமர்வில் கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு படத்தை பார்த்து பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் இறுதி முடிவு அறிவிக்கும். மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் படம் மறு ஆய்வு செய்யப்பட்டிருக்கும் என்று வாதிட்டார்.

பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகி, படத்தை 9ம் தேதி திரையிட முடிவு செய்ததால் அவசர வழக்காக விசாரிக்க தனி நீதிபதி முன் முறையிடப்பட்டது. சான்று வழங்குவது தொடர்பாக படத்தை பார்த்த குழு தகவல் தெரிவித்து விட்டால் 2 நாட்களில் சான்று வழங்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த அன்றே மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதுமான கால அவகாசம் தரவில்லை என்று வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் வரும் 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்பட உள்ளது. இது தொடர்பான தகவல் உயர் நீதிமன்ற வழக்கு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: