மதுரை எய்ம்ஸ் எப்போது திறக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் கேட்பாரா? துணை முதல்வர் உதயநிதி கேள்வி

மதுரை எய்ம்ஸ் எப்போது திறக்கப்படும் என்று சென்னை வந்திருக்கும் மோடியிடம், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்பாரா என்று பேரைவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். பேரவையில் நேற்று அதிமுக உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு பதிலளித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அதிமுக உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, நமது திராவிட மாடல் அரசு, சட்டமன்றத் தொகுதிகள் தோறும் முதலமைச்சரின் சிறிய விளையாட்டு மைதானம் கட்டவில்லை என்று உண்மைக்கு மாறான ஒரு தகவலை கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் 82 சட்டமன்றத் தொகுதிகளில் சிறிய விளையாட்டு மைதானம் கட்ட முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதில் 8 மைதானம் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.

இவை தவிர, 59 தொகுதிகளில் ஏற்கனவே இருந்த மைதானங்களை புனரமைப்பதற்காக சீரமைப்பு செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதற்காக தனியாக ரூ.50 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், 35 தொகுதிகளில் மைதானம் சீரமைப்பு பணி முடிக்கப்பட்டுவிட்டன. இந்த ஆண்டில் மீதம் இருக்கக்கூடிய 24 மைதானங்களில் சீரமைப்பு பணி செய்து முடிக்கப்படும். ஆக மொத்தம், 141 சட்டமன்றத் தொகுதிகளில் மைதானங்கள் அமைப்பதற்கான பணிகளும், சீரமைப்பு பணியும் சேர்த்து முடிக்கப்பட்டுள்ளன.

இந்த அவையிலே எடுத்துக்காட்டுக்காகச் சொல்கிறேன். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 62 பேர் தொகுதிகளில் இன்றைக்கு 32 உறுப்பினர்களுடைய தொகுதிகளில் மைதானம் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 4 பா.ஜ. சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 3 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு சிறிய மைதானம் கட்டப்பட்டு வருகின்றன. மதுரையில் 2017ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப் போகிறோம் என்று சொல்லி, 2019ம் ஆண்டு அதற்கான ஒற்றை செங்கல்லை வைத்துவிட்டு சென்றார்கள். இன்றுவரையில் அதை கட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 8 ஆண்டுகளாகியும், அது முடிக்கப்படவில்லை.

இன்றைய எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் கூட்டாக அதற்கு அடிக்கல் நாட்டினார்கள். தற்போது அவர்கள் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இன்றையதினம்கூட, பிரதமர் சென்னைக்கு வந்திருக்கிறார். தேர்தல் வரப்போகிறது. இனி, எப்படியும் 10 முறையாவது வந்துவிடுவார். நிச்சயம் மீண்டும் அவரை மதுரைக்குக் கொண்டு சென்று, அந்த எய்ம்ஸ் மருத்துவமனையைக் காட்டி, இதற்கு என்றைக்கு தான் விடிவுகாலம் பிறக்கும், என்றைக்குதான் இதனை திறப்பீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் இதை கொண்டு சென்று, இதற்கொரு விடிவுகாலம் வந்தால் தமிழ்நாட்டு மக்கள் அதற்கு நன்றி சொல்வார்கள்.

Related Stories: