துறைமுகம் ஏழுகிணறு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்

 

தண்டையார்பேட்டை: துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட ஏழுகிணறு பகுதியில் ரூ.147 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அடிக்குமாடி குடியிருப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்து ஆய்வு செய்தார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 4000 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கி பல்வேறு திட்ட பணிகள் வடசென்னை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏழுகிணறு பழைய சிறைச்சாலை சாலையில், 147 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் 776 அடுக்குமாடி குடியிருப்பு கொண்ட முதல்வர் நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் திறப்பு விழா இன்று காலை நடந்தது.

இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்து வீடு ஒதுக்கீடு ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இதைத்தொடர்ந்து குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடியிருப்புகளில் குழந்தைகளின் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, முதல்வர் படைப்பகம். பூங்கா. ஏசி பொருத்தப்பட்ட உடற்பயிற்சி கூடம், நூலகம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை தண்ணீர் தொட்டி தெருவில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 144 புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான பணியை முதல்வர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிமணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் காகர்லால் உஷா, பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: