முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆதரவாளர்களுடன் வந்து திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்.

உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தற்போது மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வைத்திலிங்கம், ஒ.பி.எஸ். ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.

கூட்டணி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சரியான முடிவெடுக்கவில்லை என பன்னீர்செல்வம் மீது வைத்திலிங்கம் கடும் அதிருப்தியில் இருந்துள்ளார். இதையடுத்து வைத்திலிங்கம் திமுகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வைத்திலிங்கம் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆதரவாளர்களுடன் வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார்.

மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் ஆகியோரை தொடர்ந்து வைத்திலிங்கமும் திமுகவில் இணைந்தார். திமுகவில் வைத்திலிங்கம் இணைந்தபோது அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, செந்தில் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்ந்துள்ளது.

‘அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் நான் இணைந்துள்ளேன். ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுப்பதில் கால தாமதம் செய்ததால் திமுகவில் இணைந்தேன்’ என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்த போது அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories: