ரூ.7.65 திருடியதாக வழக்கு 50 ஆண்டுக்கு பிறகு ரத்து: மும்பை நீதிமன்றம் உத்தரவு

மும்பை: ரூ.7.65 திருடப்பட்டதாக 50 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1977ம் ஆண்டு, அதாவது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், ரூ.7.65 திருடி விட்டதாக இரண்டு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக மும்பை மசகான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் 50 ஆண்டுகள் கடந்த பின்னும் குற்றவாளிகள் சரியான முறையில் அடையாளம் காணப்படவில்லை. பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டும் யாரும் கைது செய்யப்படவும் இல்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களும், புகார்தாரரும் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பதும் தெரியவில்லை.

இந்நிலையில் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள ரூ.7.65 திருட்டு வழக்கை கைவிடுவதாக மும்பை மசகான் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஆர்த்தி குல்கர்னி கடந்த 14ம் தேதி அறிவித்தார். மேலும், “இந்த வழக்கில் புகார் அளித்த நபர் உயிருடன் இருந்தால் அவரிடம் ரூ.7.65 பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். இல்லையெனில் அந்த பணத்தை அரசு கணக்கில் சேர்க்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆர்த்தி குல்கர்னி, “இதுபோன்று தீர்வு காணப்படாமல் தேவையின்றி நிலுவையில் உள்ள வழக்குகள் நீதித்துறைக்கு சுமையாக உள்ளது” என தெரிவித்தார். அத்துடன், தீர்வின்றி நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன.

Related Stories: