கலியாபோர்: வடகிழக்கு மாநிலமான அசாமில் காங்கிரஸ் தனது ஆட்சிக் காலத்தில் வாக்குகளுக்காக அந்த மாநிலத்தின் நிலத்தை ஊடுருவல்காரர்களுக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். தேர்தல் நடக்கவுள்ள மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்கு 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்ற பிரதமர் மோடி, அசாமின் கலியாபோரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: ஊடுருவல்காரர்கள் மக்கள்தொகை சமநிலையைக் குலைக்கிறார்கள், கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்புகளைப் பறிக்கிறார்கள், பழங்குடியினர் பகுதிகளில் நிலங்களை மோசடியாக ஆக்கிரமிக்கிறார்கள். இது அசாம் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. காங்கிரசின் ஒரே கொள்கை ஊடுருவல்காரர்களைப் பாதுகாத்து அதிகாரத்தைப் பெறுவதுதான் என்பதால், மக்கள் அக்கட்சி குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாடு முழுவதும் இந்த அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வாக்குகளுக்காக அசாமின் நிலம் ஊடுருவல்காரர்களிடம் வழங்கப்பட்டது. சமீபத்திய பீகார் தேர்தலின் போது கூட, அவர்கள் ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்தனர். ஆனால் அங்குள்ள மக்கள் அவர்களை முழுமையாக நிராகரித்தனர். அசாம் மக்களும் அவர்களுக்கு ஒரு வலுவான பதிலடி கொடுப்பார்கள்.
இப்போது பாஜவே மக்களின் முதல் தேர்வாக உள்ளது. பீகார் மட்டுமின்றி மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜ வென்றுள்ளது. கேரளாவில் கூட பாஜ மேயர் வந்து விட்டார். இந்த வகையில், நாடு முழுவதும் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள், வாக்காளர்கள் நல்லாட்சியையும் வளர்ச்சியையும் விரும்புகிறார்கள் என்பதையும், முன்னேற்றம் மற்றும் பாரம்பரியம் ஆகிய இரண்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன. காங்கிரஸ் எதிர்மறை அரசியல் செய்வதால் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் சிங்கூர் சென்ற பிரதமர் மோடி அங்கு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘‘வாக்கு வங்கி அரசியலுக்காக ஊடுருவல்காரர்களுக்கு உதவி செய்வதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் அரசு தேசிய பாதுகாப்போடு விளையாடுகிறது. வளர்ச்சியையும், நல்லாட்சியையும் உறுதி செய்ய மேற்கு வங்கத்தில் மகா காட்டுமிராண்டி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம்’’ என கூறினார்.
* சென்னைக்கு புதிய அம்ரித் பாரத் ரயில்
அசாமின் நாகோன் மாவட்டத்தில் ரூ.6,957 கோடி மதிப்பிலான காசிரங்கா மேம்பாலத் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினர். 34.45 கிமீ நீளமுள்ள இந்த மேம்பாலம் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் முழுவதும் வனவிலங்குகள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்வதையும், தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் சாலை விபத்துகளை குறைப்பதையும் சுற்றுலாவை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், திப்ருகர்-கோம்தி நகர் (லக்னோ) மற்றும் காமாக்யா-ரோஹ்தக் இடையே 2 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதே போல, மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் ரூ.830 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அவர், கொல்கத்தாவிலிருந்து டெல்லி, வாரணாசி மற்றும் சென்னை தாம்பரத்தை இணைக்கும் 3 அம்ரித் பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.
