திருவனந்தபுரம்: சபரிமலையில் இருந்து தங்கம் திருடப்பட்டது உண்மை என்று நிரூபணமாகி உள்ளது. திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் நடத்திய பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து தங்கம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் கடந்த 2019ம் ஆண்டு தான் சபரிமலையில் இருந்து தங்கம் திருடப்பட்டது என தெரியவந்தது. கோயிலில் கதவு, நிலை மற்றும் துவாரபாலகர் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டன. இதை உறுதி செய்வதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் உதவி கோரப்பட்டது. இதன்படி சபரிமலை கோயிலில் தற்போது பொருத்தப்பட்டுள்ள தங்கத் தகடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் தங்கம் திருடப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான அறிக்கை கொல்லம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
* சபரிமலையில் நேற்று வரை 52 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த வருடங்களை விட இம்முறை அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்தனர். பெரும்பாலான நாட்களில் 90 முதல் 95 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டியது. மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று வரை தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 52.25 லட்சத்தை தாண்டியது.
