ஊட்டி: ஊட்டி-கல்லட்டி மலைப்பாதையில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். திருப்பூரைச் சேர்ந்த அஸ்கர் அலி என்பவர் நண்பர்களுடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். நேற்று முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்று சுற்றிப்பார்த்த பின்பு கல்லட்டி மலைப்பாதை வழியாக ஊட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது 4வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது காரின் முன்பகுதியில் திடீரென புகை கிளம்பியது.
சுதாரித்த ஓட்டுனர் காரை அங்கே நிறுத்தி காரில் இருந்தவர்களை உடனடியாக கீழே இறங்கச் செய்தார். அடுத்த நொடியே கார் மளமளவென தீ பிடித்து எரிய துவங்கியது. இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். சுற்றுலா பயணிகளின் கார் தீப்பிடித்து எரிந்ததால் கல்லட்டி மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
