திண்டுக்கல் அருகே விவசாயம் செழிக்க வேண்டி வாழைப்பழம் சூறை விடும் விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே விவசாயம் செழிக்க வேண்டி வாழைப்பழங்கள் சூறை விடும் விநோத திருவிழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டி கிராமத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான சோலைமலை அழகர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இக்கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். இப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக இருப்பதால் ஆண்டுதோறும் தவறாமல் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி பெருமாளிடம் விவசாயிகள், பக்தர்கள் வேண்டிக்கொள்வது வழக்கம். இவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் தை மாதம் 3ம் தேதி வாழைப்பழம் சூறை விடும் விநோத திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக ஊர் எல்லையில் அமைந்துள்ள காவல் தெய்வமான ரெங்கம்மாள் கோயில் முன்பு பெரிய பாத்திரங்களில் வாழைப் பழங்கள் நிரப்பி வைக்கப்பட்டது. பின்னர், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளம், வாண வேடிக்கைகளுடன் வாழை பழங்கள் நிரப்பப்பட்ட பாத்திரங்களை ஆண்கள் மட்டுமே தலையில் வைத்து சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் சோலைமலை அழகர் பெருமாள் கோயில் முன்பாக அமைந்துள்ள மண்டு கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, வாழை பழங்கள் நிரப்பப்பட்ட பாத்திரங்கள் சோலை மலை அழகர் பெருமாள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதன்பிறகு, கோயிலுக்கு வெளியே வாழை பழங்களை சூறைவிட்டனர். அப்போது கீழே விழுந்த பழங்களை பெருமாளின் பிரசாதமாக நினைத்து பக்தர்கள் எடுத்து சென்றனர்.

Related Stories: