மனைவி தற்கொலை: எஸ்ஐ சஸ்பெண்ட்

சாத்தூர்: மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அண்ணா காலனியை சேர்ந்தவர் அருண்குமார்(28). சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல் நிலையத்தில் பணிபுரிந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இளவரசி(23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனன்யா(3) என்ற பெண் குழந்தை உள்ளது. அருண்குமார் தனது குடும்பத்துடன் சாத்தூரில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த டிச.12ஆம் தேதி இளவரசி தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். சாத்தூர் நகர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இளவரசியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, இளவரசி இறப்பில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும், இது தொடர்பாக அருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக சாத்தூர் கோட்டாட்சியர் கனகராஜ் விசாரணை நடத்தி வந்தார். இதில், அருண்குமார் வரதட்சணை கேட்டு தனது மனைவி இளவரசியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததும், இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கையை சாத்தூர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் பரிந்துரையின்பேரில் எஸ்ஐ அருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி. அபிநவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: