ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தான் குழப்பத்தில் இருக்கிறார்; ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை கர்நாடகமும் எதிர்க்கிறது: கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா பேட்டி

 

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி -2026 இன்று தொடங்கி வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி மற்றும் கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பன்னாட்டு புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தனர். தொடக்க நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் எம்பி கனிமொழி எம்பி கூறுகையில், ‘‘பன்னாட்டு புத்தகக் காட்சி மூலம் தமிழ்நாட்டின்‌ பல எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள். ஒரு மனிதனின் உலகம், வாழ்க்கை என அனைத்தையும் புத்தகம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மனிதர்களிடம் உள்ள மதம், இனம் போன்ற தடைகளை உடைப்பது தான் இலக்கியம்.

இந்த புத்தக‌க் காட்சி உலகத்தின் வாழ்க்கை, போராட்டம், அடையாளம், என அனைத்தையும் புரிந்து கொள்ள உதவும்‌’’ என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ‘‘இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சி 2026ல் ”ப்ராங்பர்ட் புத்தக காட்சி நிர்வாகக் குழு” வந்திருப்பது மிகவும் பெருமைக்குரியது. இதன் மூலம் சென்னை புத்தக்காட்சி உலகம் முழுவதும் உள்ள பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களால் உற்று நோக்கப்படும். இதன் மூலம் சென்னை புத்தகக் காட்சி அடுத்த கட்டத்திற்கு செல்லும்’’ என்றார். தொடர்ந்து பேசிய கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா, ‘‘இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் எல்லையே இல்லை, சென்னை பன்னாட்டு புத்தக காட்சியை போலவே கர்நாடகாவிலும் சர்வதேச புத்தகக் காட்சியை தொடங்கவுள்ளோம். விரைவில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.

அதற்கு அனுபவம் வாய்ந்த தமிழ்நாடு அமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். பள்ளிகளில் 3 தேர்வு முறையை அமல்படுத்தியுள்ளோம். கிராமப்புறங்களில் சுமார் 5000 நூலகங்களை அமைத்திருக்கிறோம். இதன் மூலம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளோம். தினமும் ஒரு கோடி பள்ளி மாணவர்கள் அரசியலமைப்பு முகவுரையை படிக்கிறார்கள். இருமொழிக் கல்வியை பின்பற்றி வருகிறோம். தமிழ், மலையாளம், மராத்தி உள்ளிட்ட அதிகம் பேசக்கூடிய மொழிகள் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். அதனை தொடர்ந்து கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டை போல கர்நாடகமும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எங்களுக்கென்று தனியான கலாச்சாரம், மொழி, பண்பாடு இருக்கிறது.

நாங்கள் எங்கள் தாய் மொழியை மதிக்கிறோம். எந்த மாநிலத்திலும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களிடம் மாநில கல்விக் கொள்கை உள்ளதால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது. தமிழ்நாட்டை போல கர்நாடகத்திற்கும் கல்வி நிதி தர ஒன்றிய அரசு பாகுபாடு காட்டி வருகிறது. அதற்கும் தமிழ்நாடுடன் சேர்ந்து போராடி வருகிறோம்’’ என்றார். அப்போது, ‘தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மது பங்காரப்பா, ‘ஒன்றிய கல்வி அமைச்சர் தான் குழப்பத்தில் இருக்கிறார். ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு தெரிந்த ஒரே மொழி மோடியின் மொழி. அதுதான் பிரச்சனை’ என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.

4வது ஆண்டு பன்னாட்டு புத்தக காட்சியில், 102-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் மற்றும் இலக்கிய முகவர்கள் தங்கள் பங்கேற்பை உறுதி செய்துள்ளனர். தமிழ் நாட்டைச் சேர்ந்த 90 பதிப்பாளர்கள் உள்நாட்டுப் பங்கேற்பில் இடம்பெறவுள்ளனர். கேரளா, டெல்லி, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், தெலங்கானா ஆகிய 8 மாநிலங்களில் இருந்து 42 பதிப்பாளர்கள் பங்கேற்கேற்கவுள்ளனர். தமிழ்நாடு அரசால் பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்பட்ட 28 இலக்கிய முகவர்கள் இதில் இடம்பெறுகின்றனர். மேலும் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் ஐஏஎஸ், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மற்றும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த படிப்பாளர்கள் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். இந்தாண்டு பன்னாட்டு புத்தக காட்சியில் 1500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பரிமாறிக்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Stories: