50 ஆண்டுகளில் பொங்கல் விழாவில் நிகழ்ந்த மாற்றங்கள்: அன்று உழைப்பின் கொண்டாட்டம்: இன்று பாரம்பரியத்தை நினைவூட்டும் விழா

 

தமிழர்களின் மிக முக்கியமான பண்பாட்டுத் திருவிழா பொங்கல் ஆகும். இது அறுவடைத் திருவிழாவாகவும், உழவர் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. தை மாதம் முதல் தேதியில் தொடங்கும் இந்தப் பண்டிகை, தங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் இயற்கைக்கும், சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக அமைகிறது. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப, வீட்டைச் சுத்தம் செய்து தேவையற்ற பொருட்களை நீக்கும் நாள் போகி பண்டிகையாகவும், புதுப்பானையில் புத்தரிசியிட்டு, பால் பொங்கி வரும்போது ‘பொங்கலோ பொங்கல்!’ என்று முழக்கமிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முதன்மை நாள் பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. விவசாயத்திற்குத் துணையாக இருக்கும் பசுக்களையும், காளைகளையும் குளிப்பாட்டி, அலங்கரித்து அவற்றுக்கு நன்றி செலுத்தும் நாள் மாட்டு பொங்கலாக கொண்டாடப்படுகிறது. ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகள் இந்நாளில் நடைபெறுகிறது.

* உறவினர்களையும் நண்பர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்ளும் நாள் காணும் பொங்கல்.

சூரியன், மழை, மண் ஆகிய இயற்கை சக்திகளைப் போற்றுதல். கரும்பு, மஞ்சள் குலை, மாவிலை தோரணம் மற்றும் வண்ணக் கோலங்கள் தமிழரின் பாரம்பரியத்தைப் பறைசாற்றுகின்றன. சாதி, மத பேதமின்றி அனைவரும் கொண்டாடும் ஒரு பொதுவான திருவிழாவாக இது திகழ்கிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது தமிழர்களின் நம்பிக்கை. உழைப்பையும், நன்றியுணர்வையும் போற்றும் இந்த உன்னதத் திருவிழா, தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த ஒன்றாகும். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பொங்கல் கொண்டாட்டங்களுக்கும், நடப்பு 2026 காலத்தின் கொண்டாட்டங்களுக்கும் இடையிலான விரிவான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது இன்றைய தலைமுறையினர் அறிந்திராத ஒன்று என்கின்றனர் வீடுகளில் உள்ள பெரியவர்கள்.

பண்டை காலத்தில் பொங்கல் பண்டிகைக்குச் சில நாட்களுக்கு முன்பே வீட்டைச் சுத்தம் செய்து, சுண்ணாம்பு அடித்துத் தயார் செய்வார்கள். கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவதற்காகப் பெண்கள் உரலில் நெல் குத்துவார்கள். பானைக்கு நூல் சுற்றுவது முதல், இஞ்சி மற்றும் மஞ்சள் கொத்துகளைக் கட்டுவது வரை அனைத்தும் கைகளால் செய்யப்படும். இன்று நேரமின்மை காரணமாக அனைத்தும் கடைகளில் வாங்கப்படுகின்றன.

மண் பானைகளுக்குப் பதில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பானைகள் அல்லது பிரஷர் குக்கர்கள் இடம்பிடித்துவிட்டன. பல அடுக்குமாடி குடியிருப்புகளில் விறகு அடுப்பு எரிக்க வசதி இல்லாததால், கேஸ் அடுப்பிலேயே பொங்கல் வைக்கப்படுகிறது. அன்று வீட்டு வாசலில் மூன்று கல் வைத்து அடுப்பு கூட்டி, விறகு அல்லது வரட்டி போட்டுப் புகை சூழ பொங்கல் வைப்பது ஒரு தனி அழகு. இன்று நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் ‘கேஸ் அடுப்பு’ அல்லது ‘மின்சார அடுப்பு’ பயன்பாட்டிற்கு வந்ததால், அந்த விறகு அடுப்பு வாசமும் புகையும் பல இடங்களில் மறைந்துவிட்டன.

அன்று கோலமிடுவதற்கு ஆற்று மணலைப் பரப்பி, அதன் மேல் பச்சரிசி மாவில் கோலமிடுவார்கள். மாட்டுச் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். இன்று ரசாயனக் கோலப்பொடிகள் மற்றும் ஸ்டிக்கர் கோலங்கள் அந்த இயற்கையான அழகை மாற்றிவிட்டன. அன்றைய காலகட்டத்தில் டிசம்பர் மாத இறுதியிலிருந்தே வண்ணமயமான ‘பொங்கல் வாழ்த்து அட்டைகள்’ தபால் மூலம் அனுப்பப்படும்.

தபால்காரரின் வருகைக்காகக் காத்திருப்பதே ஒரு தனி மகிழ்ச்சி. உறவினர்கள் வீட்டிற்கு நேரில் சென்று பொங்கல் பச்சரிசி மற்றும் வெல்லம் கொடுத்து வாழ்த்துவார்கள். இன்று வாழ்த்து அட்டைகள் மறைந்துவிட்டன. வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் ‘ஸ்டேட்டஸ்’ வைப்பதும், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் வாழ்த்துகளைப் பகிர்வதுமே பிரதானமாக உள்ளது. உறவுகளை நேரில் சந்திப்பது குறைந்து, வீடியோ கால் மூலம் வாழ்த்து சொல்லும் கலாச்சாரம் பெருகியுள்ளது.

அன்று கிராமத்தின் மந்தை வெளியில் இளவட்டக் கல் தூக்குதல், கபடி, வண்டிப் பந்தயம், வழுக்கு மரம் ஏறுதல், கிளித்தட்டு மற்றும் சடுகுடு போன்ற உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டுகள் நடைபெறும். மாலை நேரங்களில் தெருக்கூத்து, கரகாட்டம், பொம்மலாட்டம் அல்லது நாடகங்கள் நடக்கும். இன்று பொழுதுபோக்கு என்பது முழுக்க முழுக்கத் திரையுலகைச் சார்ந்துவிட்டது. தொலைக்காட்சியில் வெளியாகும் ‘சிறப்புத் திரைப்படங்கள்’ மற்றும் ‘சிறப்புப் பட்டிமன்றங்கள்’ பார்ப்பதிலேயே பெரும்பாலான நேரம் கழிகிறது. சிறுவர்கள் செல்போன் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அன்றெல்லாம் ஏறக்குறைய ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திலும் மாடுகள் இருந்தன. மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, கழுத்தில் மணிகளைக் கட்டி ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். மாடுகள் குடும்ப உறுப்பினர்களாகக் கருதப்பட்டன. டிராக்டர்களின் வருகையால் மாடுகளின் தேவை குறைந்துவிட்டது. இதனால் பல வீடுகளில் மாடுகள் இல்லை. மாட்டுப் பொங்கல் என்பது இன்று ஒரு சடங்காக மட்டுமே பல இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் இன்று சட்ட ரீதியான பாதுகாப்போடு ஒரு பெரிய விளையாட்டாக மாற்றப்பட்டுள்ளது.

வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் (அவரை, பூசணி, மொச்சை) கொண்டு சாம்பார் செய்வார்கள். பொங்கல் அன்று செய்யப்படும் ‘ஏழு கறி கூட்டு’ மிகவும் பிரபலம். இனிப்புக்காகக் கருப்பட்டி அல்லது அச்சு வெல்லம் அன்று பயன்படுத்தப்பட்டது. இன்று சர்க்கரை நோய் போன்ற உடல்நலக் குறைபாடுகள் மற்றும் விழிப்புணர்வு காரணமாக, பலரும் இனிப்பு குறைவான பொங்கலையோ அல்லது சிறுதானியப் பொங்கலையோ விரும்புகின்றனர்.

ஹோட்டல்களில் ‘பொங்கல் ஸ்பெஷல்’ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கமும் நகரங்களில் அதிகரித்துள்ளது. சாதி, மத பேதமின்றி ஊர் மக்கள் அனைவரும் ஊர் மந்தையில் ஒன்றுகூடி ‘சமத்துவப் பொங்கல்’ வைப்பார்கள். ஊரே ஒரு குடும்பமாகத் திகழ்ந்தது. மக்கள் தனித்தனிக் குடும்பங்களாக இன்று சுருங்கிவிட்டனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்களுக்குள் ஒரு குழுவாகச் சேர்ந்து கொண்டாடினாலும், பழைய காலத்து அந்த அந்நியோன்யம் சற்று குறைந்துதான் காணப்படுகிறது. பொங்கல் என்பது உழைப்பின் கொண்டாட்டமாக இருந்தது. இன்று அது பாரம்பரியத்தை நினைவூட்டும் ஒரு விழாவாக மாறியிருக்கிறது.

* பழமையை மீட்டெடுக்க தீர்வாகும் சமத்துவ பொங்கல்!

தனித்தனிக் குடும்பங்களாகச் சுருங்கிவிட்ட இன்றைய சூழலில், அந்தப் பழைய ஒற்றுமையை மீட்டெடுக்க ‘சமத்துவப் பொங்கல்’ சிறந்த தீர்வாகும். நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிராமங்களில் உள்ள தெருக்களில் வாழும் மக்கள் அனைவரும், ஒரு பொது இடத்தில் ஒன்றுகூடிப் பொங்கல் வைப்பதை வழக்கமாக்க வேண்டும். இது வருங்காலத் தலைமுறைக்குத் தங்கள் அண்டை வீட்டாருடன் பழகும் வாய்ப்பையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் உருவாக்கும்.

மறைந்து போன மண் பானை மற்றும் விறகு அடுப்பு கலாச்சாரத்தை மீட்டெடுக்க, குறைந்தபட்சம் பண்டிகை காலங்களிலாவது இயற்கை சார்ந்த பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வேதியியல் கோலப்பொடிகளைத் தவிர்த்து, பழைய முறைப்படி பச்சரிசி மாவில் கோலமிடுவதும், நெகிழித் தோரணங்களுக்குப் பதில் மாவிலை மற்றும் தென்னை ஓலைத் தோரணங்களைப் பயன்படுத்துவதும் சுற்றுப்புறச் சூழலையும், நமது பாரம்பரியத்தையும் காக்கும்.

வாழ்த்து அட்டைகள் மறைந்திருக்கலாம், ஆனால் நேரில் சென்று வாழ்த்துப் பகிரும் முறையை மீட்டெடுக்க முடியும். பொங்கல் தினத்தில் கைப்பேசி திரையைப் பார்ப்பதைத் தவிர்த்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வதை ஒரு கடமையாகக் கொள்ள வேண்டும். இது டிஜிட்டல் உலகில் தொலைந்து போன ‘மனித உணர்வுகளை’ மீண்டும் உயிர்ப்பிக்கும்.
நலிவடைந்து வரும் தெருக்கூத்து, கரகாட்டம் போன்ற கலைகளை மீட்டெடுக்க, அரசு மற்றும் தனியார் அமைப்புகள் பண்டிகை காலங்களில் கலை நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

நவீன இசைக் கச்சேரிகளுக்குப் பதில், கிராமியக் கலைகளுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதன் மூலம், அடுத்த தலைமுறைக்கு நமது கலை மரபைக் கடத்த முடியும். இயந்திரமயமான உலகில் மாடுகளின் முக்கியத்துவம் குறைந்திருக்கலாம். ஆனால், நமது குழந்தைகளுக்கு மாட்டுப் பொங்கலின் காரணத்தை உணர்த்த, விவசாய நிலங்களுக்கும் கால்நடைப் பண்ணைகளுக்கும் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். மண்ணின் வாசனையையும், உழவுத் தொழிலின் உன்னதத்தையும் அவர்கள் உணரும்போதுதான், பொங்கல் பண்டிகையின் முழு நோக்கம் நிறைவேறும்.

கல்வி நிறுவனங்கள் பொங்கல் கொண்டாட்டங்களை வெறும் விடுமுறை நாளாகப் பார்க்காமல், மாணவர்களுக்குப் பாரம்பரிய விளையாட்டுகள் (உறி அடித்தல், கபடி போன்றவை) மற்றும் பாரம்பரிய உணவு முறைகளை விளக்கும் களமாக மாற்ற வேண்டும். பாரம்பரியம் என்பது ஒரு சடங்கு அல்ல; அது நமது அடையாளம். முன்பு இருந்த அந்த உன்னதமான பொங்கல் கொண்டாட்டங்களை மீண்டும் மீட்டெடுப்பது என்பது வெறும் பழமைவாதம் அல்ல, அது நமது கலாச்சார வேர்களைப் பலப்படுத்தும் முயற்சி. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், வரும் ஆண்டுகளில் பொங்கல் மீண்டும் ஒரு உன்னத மக்கள் திருவிழாவாக மாறும் என்பதில் ஐயமில்லை.

* தனி மனித பொழுது போக்காக மாறிய பொங்கல்

அன்று பொங்கலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிடுவார்கள். சுண்ணாம்பில் நீலம் கலந்து கைகளால் வீடுகளுக்கு வெள்ளை அடிப்பார்கள். களிமண் வீடாக இருந்தால், தரையை மாட்டுச் சாணத்தால் மெழுகுவார்கள். இன்று நவீன பெயிண்ட்கள் வந்துவிட்டன. பலரும் ‘புரொபஷனல் பெயிண்டர்களை அழைத்து வேலை முடிக்கிறார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பொங்கலுக்கு என்று தனியாக வர்ணம் பூசுவது குறைந்துவிட்டது.

அன்று விறகு அடுப்புக்காகக் காய்ந்த சுள்ளிகள், வரட்டி மற்றும் வேப்பங்குச்சிகளைச் சேகரிப்பார்கள். உரலில் நெல் குத்தி அரிசி எடுப்பது பெண்களின் முக்கிய வேலையாக இருந்தது. இன்று அனைத்தும் ‘பேக்கிங்’ செய்யப்பட்ட நிலையில் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன. விறகுக்கு பதில் எரிவாயு சிலிண்டர் அல்லது மின்சார அடுப்புகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதே இன்றைய முன்னேற்பாடாக மாறிவிட்டது.

‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப, வீட்டில் உள்ள தேவையற்ற பாய், துணி மற்றும் மரப் பொருட்களை எரிப்பார்கள். காப்புக்கட்டு (வேப்பிலை, ஆவாரம்பூ, சிறுபீளை) கட்டுவது அன்று மிகவும் கட்டாயமாக இருந்தது. இன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு காரணமாக டயர்கள், பிளாஸ்டிக் எரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. நகரங்களில் பல இடங்களில் ‘போகி’ அடையாளத்திற்காகச் சிறிய அளவில் மட்டுமே எரிக்கப்படுகிறது. காப்புக்கட்டு என்பது இன்று ஒரு கடமைக்காகக் கடையில் வாங்கி வந்து சொருகப்படுகிறது.

காணும் ெபாங்கல் நாளில் அன்று உறவினர்கள் ஒருவருக்கொருவர் வீடுகளுக்குச் சென்று நலம் விசாரிப்பார்கள். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவதும், அவர்களுக்குப் ‘பச்சரிசி-வெல்லம்’ கொடுப்பதும் வழக்கம். இன்று இது ஒரு ‘சுற்றுலாத் தினமாக’ மாறிவிட்டது. கடற்கரைகள், பூங்காக்கள் அல்லது வணிக வளாகங்களுக்கு மக்கள் படையெடுக்கிறார்கள். உறவுகளை நேரில் சந்திப்பதற்குப் பதில் சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

பொங்கலுக்கு அடுத்த நாட்களில் தெருக்களில் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடுவது, உறி அடித்தல் மற்றும் கபடி போன்ற வீர விளையாட்டுகள் களைகட்டும். ஊரே ஒன்றாகச் சேர்ந்து அன்று விருந்துண்டு மகிழ்வார்கள். இன்று இந்தப் பழக்கம் கிராமங்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளது. நகரங்களில் பொங்கலுக்கு அடுத்த நாள் அலுவலகங்களுக்குத் திரும்பும் அவசரத்தில் மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

விவசாயக் கூலிகள் மற்றும் கிராமத்தின் பல்வேறு சேவைகளைச் செய்பவர்களுக்கு விவசாயிகள் புத்தாடை மற்றும் தானியங்களைப் பரிசாக வழங்குவார்கள். இதனை அன்று முறை செய்தல் என்று அழைத்தனர். இன்று இந்த முறை பெருமளவு மறைந்துவிட்டது. தற்போது அலுவலகங்களில் ‘பொங்கல் போனஸ்’ அல்லது இனிப்புப் பெட்டிகள் வழங்கும் கலாச்சாரம் வந்துவிட்டது.
அன்று பொங்கல் அன்று வெளியாகும் படங்களைப் பார்க்க மாட்டு வண்டிகளில் ஏறித் திரையரங்குகளுக்குச் செல்வார்கள்.

அது ஒரு பெரிய திருவிழாவாக இருக்கும். இன்று ஒடிடி தளங்களில் படங்கள் வெளியாவதால், வீட்டிலேயே அமர்ந்து பார்க்கும் வசதி வந்துவிட்டது. திரையரங்குகளுக்குச் செல்வது என்பது இப்போது ஒரு ஆடம்பரமான பொழுதுபோக்காக மாறியுள்ளது. அன்று பண்டிகைக்கு முன்னும் பின்னும் உடல் உழைப்பும் மனித உறவுகளும் பிரதானமாக இருந்தன; இன்று இயந்திரமயமான எளிமையும் தனிமனித பொழுதுபோக்கும் பிரதானமாகிவிட்டன.

Related Stories: