மகாராஷ்டிராவில் 29 மாநகராட்சிகளில் நடந்தது உள்ளாட்சி தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு

மும்பை:  மும்பை, புனே, தானே உட்பட 29 மாநகராட்சிகளில் நேற்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் காலையில் இருந்தே ஆர்வமுடன் வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். சில இடங்களில் விரவில் வைக்கப்பட்ட மை எளிதாக அழிக்க முடிவதாக பரபரப்பு ஏற்பட்டது. விரல் மையை அழிக்கும் வீடியோக்களும் வைரலாகின. இது முறைகேடுக்கு வழி வகுப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது.
மகாராஷ்டிராவில் மும்பை, தானே, புனே உள்ளிட்ட மாநகராட்சி நிர்வாகங்களின் பதவிக்காலம் முடிவடைந்து, அதிகாரிகள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து முதல் கட்டமாக கடந்த டிசம்பர் 2ம் தேதி நகராட்சிகள் மற்றும் நகர் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்தது. முன்னதாக, உரிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என  சில வேட்பாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய அவகாசம் வழங்கப்படாத இடங்களில் தேர்தலை டிசம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து டிசம்பர் 2ம் தேதி சில நகராட்சி, நகர் பஞ்சாயத்துகளுக்கும், டிசம்பர் 20ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட இடங்களுக்கும் தேர்தல் நடந்தது. டிசம்பர் 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து 2வது கட்டமாக மும்பை, தானே, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. வாக்குப்பதிவு காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  வாக்காளர்கள் காலை முதலே வாக்களிக்க ஆர்வமுடன் வந்தனர். எனினும், வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்குப் பிறகு வாக்குச்சாவடி மாற்றங்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் என வாக்காளர்கள்  புகார் அளித்தனர். பட்டியலில் பெயரைத் தேடுவதில் சிரமங்கள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதாக மும்பைவாசிகள் பலர் தெரிவித்தனர்.  தேர்தல் பணியாளர்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்கள்கூட இதனை ஒப்புக் கொண்டனர். தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டியலில் உள்ள புகைப்படங்கள் மங்கலாக அச்சிடப்பட்டிருந்ததால், சரிபார்ப்புப் பணியில் சிக்கல் நேர்ந்ததாக அவர்கள் கூறினர்.
பல வாக்காளர்கள், தங்களின் பெயர்கள் பல ஆண்டுகளாக இருந்த வாக்குச்சாவடிகள் போதுமான முன் அறிவிப்பு இல்லாமல் மாற்றப்பட்டதாகவோ அல்லது இணைக்கப்பட்டதாகவோ புகார் கூறினர்.
சிலர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைத் தேடி ஒரு உதவி மையத்திலிருந்து மற்றொரு மையத்திற்கு அலைந்து திரிவதைக் காண முடிந்தது. மும்பை முழுவதும் உள்ள பல வாக்குச்சாவடிகளில், குறிப்பாக காலை நேரங்களில், இதுபோன்ற குழப்பங்கள் காணப்பட்டன.
கடந்த 2 தேர்தல்களில், நாங்கள் காலாசவுக்கி காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தோம். ஆனால் இந்த முறை அது வெகு தொலைவில் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. துணைப் பட்டியலிலும் என் பெயரைக் கண்டுபிடிப்பதில் சிரமப்பட்டேன், என வாக்காளர் ஒருவர் கூறினார். பரேலைச் சேர்ந்த சிவசேனா பிரமுகர் ஒருவர் கூறுகையில், பலரும் தங்களின் வழக்கமான வாக்குச்சாவடிகளுக்குச் சென்றபோது, ​​அவை மாற்றப்பட்டிருப்பதை அறிந்து, அன்றைய தினம் காலையில் வாக்களிக்க முடியவில்லை.  அவர்களில் பலர் வாக்களிக்காமலேயே வேலைக்குச் சென்றுவிட்டனர், என்றார். இதுபோல்,  ஒரே கட்டிடத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு வெகு தொலைவில் அமைந்துள்ள வெவ்வேறு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. சில இடங்களில், வாக்காளர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளைக் கண்டறிய தேர்தல் பணியாளர்கள் உதவுவதைக் காண முடிந்தது.
 விலே பார்லேயை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘‘ நான் 2009 முதல் இந்த பகுதியில் வாக்களித்து வருகிறேன். ஆனால் முதல் முறையாக, நான் முன்பு வசித்த தீந்தோஷி பட்டியலிலும் என் பெயர் இடம்பெற்றிருப்பதைக் கண்டேன். கடந்த மாதம் தேர்தல் அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்து, தீந்தோஷி எனது முந்தைய முகவரி என்றும், நான் விலேபார்லேவுக்கு மாறி விட்டேன் எனவும்  ஒரு எழுத்துப்பூர்வ உறுதியை பெற்றுக் கொண்டனர். இருப்பினும், என் பெயருக்குப் பக்கத்தில் இரட்டை நட்சத்திரக் குறி அப்படியே இருந்தது.
 இதனால் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதையடுத்து முன்பு நான் பூர்த்தி செய்த படிவத்தைக் காட்டிய பிறகு, அதிகாரிகள் மற்றொரு படிவத்தைச் சமர்ப்பிக்கும்படி கேட்டு, பின்னர் வாக்களிக்க அனுமதித்தனர்,’’ என்றார். இதற்கிடையில், ஒரு ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர், தாதரில் உள்ள ஜி-வடக்கு வார்டு தேர்தல் அதிகாரிடம் தனது கட்டிடத்தைச் சேர்ந்த 4 வாக்காளர்களின் பட்டியலைச் சமர்ப்பித்துள்ளார். இதன்மூலம் ஆள்மாறாட்ட முயற்சிகள் நடக்கக்கூடும் என்பதால் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  அவர் கூறுகையில், ‘‘பட்டியலில் நான் சமர்ப்பித்த 4 பேரும் வெளிநாட்டில் உள்ளனர்.
யாராவது அவர்கள் பெயரில் கள்ள வாக்குகள் போட முயற்சிப்பார்கள்’’ என்றார். இது குறித்து தேர்தல் அதிகாரி கூறுகையில், ‘‘அவர் சமர்ப்பித்த மனு வாக்குச்சாவடி அதிகாரியிடம் வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அவர் உரிய நடவடிக்கை எடுப்பார், என்றார்.  பிவண்டி நிசாம்பூர் பகுதியில் நேற்று மாலை வரை 38 சதவீத வாக்ககள் மட்டுமே பதிவாகின. ஆனால், நவிமும்பையில் 45 சதவீதத்துக்கு மேல் பதிவானது. மும்பை மாநகராட்சியை பொறுத்தவரை 42 சதவீதத்தையும் தாண்டி வாக்ககள் பதிவாகின. முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார், ரவீந்திரசவான், எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் எம்பி, வர்ஷா கெய்க்வாட் எம்பி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்களான கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், திரையுலக பிரபலங்கள் சல்மான்கான், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
இதனிடையே தேர்தலில் வைக்கப்பட்ட  மை எளிதாக அழிக்கப்படுவதாக எம்என்ஸ் தலைவர் ராஜ்தாக்கரே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது தொடர்பாக எம்பி வர்ஷா கெய்க்வாட் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் காங்கிரசைச் சேர்ந்த நபர் ஒருவர் அசிட்டோன் எனப்படும் ரசாயனத்தை பயன்படுத்தி தனது விரலில் இருந்த தேர்தல் மையை துடைக்கிறார். அந்த மையானது எளிதில் அழிந்துவிடுகிறது.
இந்த வீடியோவை பதிவிட்ட எம்பி வர்ஷா கெய்க்வாட், ‘“காலையிலிருந்து வாக்களிப்பதை குறிக்க பயன்படுத்தப்படும் மை எவ்வாறு எளிதாகத் துடைக்கப்படுகிறது என்பது குறித்து பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எனது சக ஊழியரும் அவரது மனைவியும் இந்த மையை அசிட்டோன் அல்லது நெயில் பாலிஷ் ரிமூவர் மூலம் எவ்வாறு எளிதாகத் துடைக்க முடியும் என்பதை நிரூபிக்கிறார்கள். இந்த முறை மும்பை மாநகராட்சி நிர்வாகத்தின் பொறுப்புணர்வும், வெளிப்படைத்தன்மையும் பல கேள்விக்கு ஆளாகியுள்ளது தேபோல வாக்காளர்களின் பெயர்கள் காணாமல் போவது, தேர்தல் கமிஷனர் இணையதளம் செயலிழந்து போவது ஆகியவை வாக்காளர்கள் தங்கள் பெயர்களைக் கண்டுபிடிப்பதை கடினமாக்குகின்றன. நமது ஜனநாயக செயல்பாட்டில் மக்களின் நம்பிக்கையை எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையமும் மும்பை மாநகராட்சியும் அதைப் பற்றி முற்றிலும் கவலைப்படவில்லை. இது அவமானம்’ என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. மதியத்துக்குள் முன்னணி நிலவரம் தெரியும் எனவும், மாலையில் ஏறக்குறைய வெற்றி தோல்வி யார் என்பது தெரிந்து விடும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஆசியாவின் மிகவும் பணக்கார மாநகராட்சியான மும்பை மாநகராட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
தேர்தல் ஆணையர் தினேஷ் வாக்மரே நேற்று மாலை நிருபர்களிடம் கூறுகையில், வாக்குப்பதிவு மாலை 5.30 மணிக்கு மும்பையில் ஏறக்குறைய 46 சதவீதம் முதல் 50 சதவீதம் வாக்குப்பதிவு ஆனது. இது கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகம். இது திருப்தி அளிப்பதாக உள்ளது. மும்பையில் 25 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன
என்றார்.
‘மார்க்கர் பேனா’ குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையர் விளக்கம்
மும்பை மாநகராட்சித் தேர்தலில் வாக்களித்த பிறகு அதிகாரிகள் சிலர் மைக்கு பதிலாக மார்க்கர் பேனா பயன்படுத்தியதே மை அழிவதற்கு காரணம் என தாக்கரே சகோதரர்கள் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத் தேர்தல் ஆணையர் தினேஷ் வாக்மரே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: மாநகராட்சித் தேர்தலின்போது மை அழிக்கப்படுவது குறித்து நிறைய குழப்பங்கள் நிலவுகின்றன. இது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்தப்படும் அதே மைதான் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மாநிலத் தேர்தல் ஆணையம் 2011 ஆம் ஆண்டு முதல் இதே மார்க்கர் பேனாவைத்தான் பயன்படுத்தி வருகிறது. இந்த மை உண்மையில் அழியாதது. இதை விரலில் பூசிய பிறகு காய சுமார் 12 முதல் 15 வினாடிகள். இந்த 15 விநாடிகள் வரை வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு உள்ளேயே இருப்பார்கள்.
அடுத்த மாதம் நடைபெறும் ஜில்லா பரிஷத் தேர்தலில் இந்த மை பயன்படுத்தப்படும். போலி வாக்குப்பதிவு குறித்து ஒரே ஒரு புகார் மட்டுமே பெறப்பட்டுள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர்பட்டியல் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. எனவே மக்களவை மற்றும் பேரவைத் தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்கள் அதே வாக்குச்சாவடிகளில் இருக்க வாய்ப்பில்லை. தேர்தலுக்கு முன்கூட்டியே இந்த விவரங்களை கண்டுபிடிப்பது வாக்காளர் மற்றும் வேட்பாளரின் கடமை. எல்லாவற்றிற்கும் தேர்தல் ஆணையத்தை குறை சொல்ல முடியாது. வார்டு வாரியான வாக்குப்பதிவில் சட்டமன்ற மற்றும் மக்களவை வாக்குச் சாவடிகள் ஒரே மாதிரியாக இருக்காது. அமைச்சர் கணேஷ் நாயக், நவிமும்பையில் உள்ள தவறான வாக்குச்சாவடிக்கு சென்றார். எனவேதான் அவர் வாக்குசெலுத்த நேரம் எடுத்தது. இவ்வாறு தினேஷ் வாக்மரே விளக்கமளித்தார்.
மும்பை மாநகராட்சி மறுப்பு
உள்ளாட்சித் தேர்தலின் போது வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் தேர்தல் மை எளிதில் அழிவதை மும்பை மாநகராட்சி கமிஷனரும், மாநகராட்சியின் தலைமை தேர்தல் அதிகாரியுமான பூஷன் கக்ரானி ஒப்புக் கொண்டதாக வெளியான தகவலை மும்பை மாநகராட்சி நிராகரித்தது.இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘‘வாக்களித்த பிறகு வாக்காளர் விரலில் வைக்கப்படும் மையானது எளிதில் அழிக்கப்படுவது குறித்து மாநகராட்சி கமிஷனர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. எனவே, ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி உண்மை இல்லை” என்று தெரிவித்துள்ளது.
தேர்தல் மை அழிவது உண்மைதான் சிவசேனா அமைச்சர் ஒப்புதல்
குடும்பத்துடன் சென்று வாக்குச் செலுத்திய சிவசேனா அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தேர்தல் மை எளிதாக அகற்றப்படுகிறது என்பது உண்மைதான். இதன் காரணமாக சில இடங்களில் போலி வாக்களிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.
தேர்தல் மையை அழிப்பவர் மீது நடவடிக்கை வேண்டும் : ஆஷிஷ் ஷெலார் கோரிக்கை
பாஜ தலைவரும், அமைச்சருமான ஆஷிஷ் ஷெலார் அளித்த பேட்டி: மையைத் துடைப்பவர்கள் போலியாக வாக்களிக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். தேர்தலின் புனிதத்தைப் பாதுகாக்கவும், மை குறித்து குழப்பத்தை ஏற்படுத்துவதற்குப் பின்னால் உள்ள உண்மையான நோக்கத்தைக் கண்டறியவும் கடுமையான நடவடிக்கை அவசியம். பகிரங்க குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களில் யாராவது தேர்தல் ஆணையத்திடம் முறையான புகார் அளித்தார்களா அல்லது அளிக்கப் போகிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான கருத்துக்கள் பொறுப்பற்றவை, மேலும் அரசியலமைப்பு அமைப்பின் மீது அவதூறுகளை வீசுவது ஜனநாயக செயல்முறையை பலவீனப்படுத்துவதற்குச் சமம். இந்த விவகாரம் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு பதிலாக, அரசியல் மயமாக்கப்படுகிறது, என்று காட்டமாக தெரிவித்தார்.

Related Stories: