ஈரான் வான்வெளி மூடல்: சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிப்பு: ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் எச்சரிக்கை

டெல்லி: ஈரானில் நிலவி வரும் அசாதாரணமான சூழல் காரணமாக அந்நாட்டின் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் சர்வதேச விமானச் சேவைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஈரான் வான்வெளியைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளில் விமானங்கள் இயக்கப்படுவதாகவும், மாற்றுப் பாதை வசதி இல்லாத இடங்களில் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேபோல் இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ஈரான் வான்பரப்பைத் தவிர்த்து நீண்ட தூர மாற்றுப் பாதைகளில் விமானங்கள் இயக்கப்படுவதால் பயண நேரம் கணிசமாக அதிகரிக்கும் என்றும், இதனால் விமானங்கள் தாமதமாகக் இலக்கைச் சென்றடைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. எனவே, பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்னதாகவே தங்களது விமானத்தின் தற்போதைய நிலையை இணையதளம் வாயிலாகச் சரிபார்த்துக் கொள்ளுமாறு இரு நிறுவனங்களும் அறிவுறுத்தியுள்ளன.

விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் FlightRadar24 தளத்தின் தகவல்படி, தற்போது ஈரானின் வான்பரப்பில் வணிக ரீதியான விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதற்றம் காரணமாகப் பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்களும் ஈரானைத் தவிர்த்து பாதுகாப்பான வான்வெளிகள் வழியாகச் சுற்றுப் பாதையில் செல்வதால், உலகளாவிய விமான அட்டவணைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இணைப்பு விமானங்களைப் பிடிக்க வேண்டிய பயணிகள் கூடுதல் காத்திருப்பு நேரத்தையும், நீண்ட பயணத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தற்போதைய நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ள ஏர் இந்தியா, ஈரானில் சூழல் சீரடைந்து வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டவுடன் பழைய வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படும் என்று கூறியுள்ளது. அதுவரை நிலவும் தற்காலிக மாற்றங்களுக்குப் பயணிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என விமான நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

Related Stories: