மும்பை: மும்பை விமான நிலைய ரேடாரை தகிசரில் இருந்து கோராய்க்கு மாற்றுவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் பட்நவிஸ் தெரிவித்துள்ளார். மும்பை விமான நிலையத்தின் ரேடார் தகிசர் பகுதியில் அமைந்துள்ளது. இது அந்த பகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு தடையாக இருந்து வந்தது. இதனை இடமாற்றம் செய்ய மாநில அரசு முடிவு செய்தது. அதன்பேரில் கோராய் பகுதியில் நிலம் ஒதுக்கவும் மாநில அரசு முடிவு செய்தது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மகாராஷ்டிரா அரசு மற்றும் பிறர் உட்பட பல்வேறு பங்குதாரர்களுக்கு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த மாதம் சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன், தகிசரில் உள்ள உயர் அதிர்வெண் ரேடார் கோராய்க்கு மாற்றப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் ரேடார் இடமாற்றத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் பட்நவிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பட்நவிஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘‘மும்பை விமான நிலையத்தின் உயர் அதிர்வெண் ரேடாரை தகிசரில் இருந்து கோராய்க்கு மாற்ற இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இது வடக்கு மும்பையில் உள்ள தகிசர் பகுதியை மறுவடிவமைப்பு செய்வதற்கு வழி வகுக்கும். ரேடார் அமைப்புக்காக கோராய் பகுதியில் நிலம் ஒதுக்க மாநில அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடியின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் தகிசரில் மலிவு விலை வீட்டுவசதி திட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் உள்ள முக்கிய தடைகள் நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
