மதுரை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்கிற்கு வரவேற்பு அதிகரிப்பு: இரண்டரை வருடங்களாக லாபம் ஈட்டி வருகிறது

 

மதுரை: சென்னை, கோவை, நெல்லையை தொடர்ந்து மதுரை மத்திய சிறையிலும் பெட்ரோல் பங்க திறக்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து கடந்த 2023ம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். தமிழகத்தில் மதுரை உட்பட 9 மத்திய சிறைகளில் கைதிகள் மறுவாழ்வை மையம் கொண்டு அப்போது இருந்த டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார்.

கைதிகளின் தயாரிக்கும் பொருட்கள் சந்தைப்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அந்த வகையில் மதுரை மத்திய சிறையில் 1,750க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இவர்கள் பேவர் பிளாக், மர வேலைகள், நர்சரி, கேன்டீன், தபால் கவர் தயாரிப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த சிறைச்சாலை வாசலில் சிறப்பு அங்காடி நடத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து கைதிகள் நடத்துவதற்காக பெட்ரோல் பங்க் திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு, திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன் அனுமதி வழங்கி அரசரடி- ஆரப்பாளையம் பிரிவில் புதிய பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டு, கடந்த 2 இரண்டரை வருடமாக மிக சிறப்பாக லாபத்தில் இயங்கி வருகிறது.

* கைதிகளின் வாழ்வாதாரம் பெருகும்

சிறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை மத்திய சிறையில், கைதிகளுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் புது, புது தொழில்கள் தொடங்க திட்டமிடப்பட்டு, அரசு ஆலோசனையுடன் செயல்படுத்தபட்டு வருகிறது. சிறைச்சாலை – ஆரப்பாளையம் சந்திப்பில் உள்ள டி.ஐ.ஜி பங்களா அருகே பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு, கடந்த இரண்டரை ஆண்டு காலமாக 100க்கும் மேற்பட்ட கைதிகள் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, கோவை, நெல்லை மற்றும் சென்னை புழலில் பெட்ரோல் பங்கை கைதிகள் பராமரித்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சிறைச்சாலை என்பது கைதிகளுக்கான தண்டனைக் கூடமாக மட்டும் அல்லாமல் அவர்களைத் திருத்தும் பள்ளிக் கூடமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப மதுரை சிறைச்சாலை நிர்வாகத்தினர் கைதிகளுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து பெட்ரோல் பங்க்கில், சுழற்சி முறையில் 30 கைதிகள் மற்றும் 10 போலீசாருக்கு கூடுதலாக வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கைதிகளின் வாழ்வாதாரம் பெருகவும், ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வாய்ப்புகள் கிடைத்துள்ளது.தமிழகத்தில் மற்ற பெட்ரோல் பங்க்குளை விட கைதிகள் விற்பனை செய்யும் பங்க்கில் பெட்ரோல் நிரப்புவதில் பொதுமக்கள் வரவேற்று உள்ளனர். இது நல்ல லாபமாக செயல்பட்டு வருகிறது. இதனால், தொடர்ந்து மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது’’ என்றார்.

Related Stories: