எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி அவருடைய திருவுருவச் சிலைக்கு நாளை அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்!

 

சென்னை: மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளான ஜனவரி 17 அன்று, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109-வது பிறந்த நாள் ஜனவரித் திங்கள் 17 ஆம் நாள். அந்நன்னாளில் தமிழ்நாடு அரசின் சார்பில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், 17.1.2026 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் 17.1.1917 அன்று கோபாலமேனன் சத்யபாமா தம்பதியருக்கு 5வது மகனாகப் பிறந்தார். தம் சிறுவயது முதலே நாடகத்தில் நடிக்கத் தொடங்கி, பின்னர் தமிழ்த் திரையுலகில் 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து 30 ஆண்டுகள் தமிழ்த் திரைப்பட உலகின் முடிசூடா மன்னராக விளங்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1950ஆம் ஆண்டு திரைக்கதை, வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி ஆகிய திரைப்படங்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து, எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த சிறந்த திரைப்படங்களுக்குத் தேசிய விருதுகளும், தமிழ்நாடு அரசின் சார்பில் அண்ணா விருதும் வழங்கப்பட்டன. பேரறிஞர் அண்ணா அவர்கள், எம்.ஜி.ஆர் அவர்களை, ‘இதயக்கனி’ என்று அழைத்தார். நாளடைவில் அனைத்துத் தரப்பு மக்களாலும் மக்கள் திலகம் என அழைக்கப்பட்டார்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திராவிடச் சிந்தனைகளாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு, 1953 ஆம் ஆண்டு தம்மைத் திராவிட இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். இவர் நடித்த திரைப்படங்களிலும் திராவிடக் எடுத்துரைத்தார்.

கொள்கைகளை மக்களுக்கு 1962ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1967, 1971 ஆம் ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1977 முதல் 1987 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் திகழ்ந்து பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார்.

முதலமைச்சர் பொறுப்பில் இருந்தபோதே உடல்நலம் குன்றி, டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் 24-12-1987 அன்று மறைந்தார். எம்.ஜி.ஆர். அவர்களின் அளப்பரிய மக்கள் சேவையினைப் பாராட்டி, 1988 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

மேலும், எம்.ஜி.ஆர். அவர்களைப் பெருமைப்படுத்துகின்ற வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 17.1.1990 ஆம் ஆண்டு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் சென்னை கிண்டியில் உருவாக்கப்பட்ட மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியதோடு. அப்பல்கலைக்கழக முகப்பில் அவரது திருவுருவச் சிலையினை நிறுவி 31.7.1998 அன்று திறந்து வைத்துப் பெருமை சேர்த்தார்.

சத்துணவுத் திட்டத்தின் மூலம் அழியாப் புகழ்பெற்றுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளான ஜனவரி 17 ஆம் நாள். ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் முதலானோர் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்கள்.

Related Stories: