திருவனந்தபுரம்: சபரிமலையின் சிகர நிகழ்வான மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.ஜோதி வடிவில் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மகரவிளக்கு பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் சுத்திகிரியை பூஜைகள் நேற்று நிறைவடைந்தன. இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் தொடங்கின. மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின்னர் 2.45 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3.08 மணியளவில் மகரசங்கிரம பூஜை நடைபெற்றது.
இந்த பூஜையில் திருவிதாங்கூர் மன்னர் அரண்மனையில் இருந்து அனுப்பி வைக்கப்படும் நெய்யை பயன்படுத்தி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பந்தளம் சாஸ்தா கோயில் இருந்து கொண்டுவரப்படும் திருவாபரணம் மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை சென்றடைந்தது. திருவாபரணம் ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி தெரியும். இதன் பிறகு 11 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும்.
இன்று 35 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மகரஜோதியை தரிசிப்பதற்காக கடந்த பல நாட்களாக ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மகரஜோதியை தரிசிப்பதற்காக சபரிமலையில் குவிந்துள்ளனர். இதனால் நெரிசல் ஏற்படாமல் இருக்க சபரிமலையை சுற்றிலும் 4000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஜோதி தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்களுக்காக கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ் வசதி செய்துள்ளது.
