கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் நேருநகர், தானியாறு, பதியம்கொட்டாய், அத்திமூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் படங்கள் பரவி வருகிறது.
இதற்கிடையில் அப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு சென்ற 6 மாடுகள், 2 கன்றுக்குட்டிகளை சில தினங்களாக காணவில்லை எனவும், இரவு நேரங்களில் அப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும். கால்நடைகளை சிறுத்தை அடித்துக்கொன்றிருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் கூறுகையில், ‘சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் படங்கள், வீடியோக்கள் வெளியாகி வருகிறது. அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? எப்போது எடுக்கப்பட்டது? மற்றும் அதன் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 2 கன்றுகுட்டிகள் மாயமாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் மர்மவிலங்கு குறித்து கண்டறிய பல்வேறு வனப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் வனவிலங்கு நடமாட்டம் பதிவாகியுள்ளதா? என கண்காணித்து வருகிறோம்’ என்றனர்.
கலசப்பாக்கம் அடுத்த பாடகம், மன்சூராபாத், பெரணம்பாக்கம் பகுதிகளில் கிராமத்தில் ஏற்கனவே 7 மாதத்திற்கு முன் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. அதேபோல் வன்னியனூர், காப்பலூர், கச்சேரி மங்கலம் பகுதியில் 2 வாரங்களுக்கு முன் சிறுத்தை தாக்கி நாய், கன்றுகுட்டி இறந்தது. மேலும் 2 கன்றுகுட்டிகள் படுகாயம் அடைந்தது. இந்நிலையில் கலசப்பாக்கம் நேரு நகர், தானியாறு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வீடியோ பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
