*அமைச்சர் கோவி.செழியன் பரிசு பெட்டகங்கள் வழங்கினார்
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தூய்மை அருணை அமைப்பு சார்பில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பரிசு பெட்டகங்கள் வழங்கினார்.திருவண்ணாமலையில் தூய்மை அருணை அமைப்பு கடந்த 7 ஆண்டுகளாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பல்வேறு சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி, மாதந்தோறும் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழாவை கடந்த ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, மாதந்தோறும் வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள நகர்ப்புற அருணை மருத்துவமனை வளாகத்தில், தூய்மை அருணை அமைப்பு சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நேற்று நடந்தது.
அருணை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் குணசிங் தலைமை தாங்கினார். அருணை கல்விக் குழுமங்களின் துணைத் தலைவர் எ.வ.வே.குமரன், அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிஇஒ பேராசிரியர் அசோக்தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூய்மை அருணை மேற்பார்வையாளர் டாக்டர் எ.வ.வே.கம்பன் வரவேற்றார். நிகழ்ச்சியில், தூய்மை அருணை மேற்பார்வையாளர் ப.கார்த்திவேல்மாறன் தொகுத்து வழங்கினார். மகப்பேறு சிறப்பு மருத்துவர் கவிதா மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு பட்டுச்சேலை, இனிப்புகள், தின்பண்டங்கள் மற்றும் மங்கலப்பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகங்களை வழங்கி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது:
முதல்வரின் எண்ணங்களை செயல்படுத்துவதில் முன்னணியில் நிற்பவர் அமைச்சர் எ.வ.வேலு. இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்ற பணிகளை நிறைவேற்றியிருக்கிறார். அதனால், இந்த மாவட்டம் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது.
திருவண்ணாமலை நகர மக்கள் மீது கொண்ட அக்கறையால், கடந்த 2017ம் ஆண்டு தூய்மை அருணை அமைப்பை தொடங்கி, அதன்மூலம் நகரை தூய்மையாகவும், பசுமையாகவும் பராமரித்து வருகிறார். கொரோனா காலத்தில் அவர் மேற்கொண்ட சேவை, மக்களின் உயிர் காக்க உதவியது. அதேபோல், தரமான மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும என்ற உயர்ந்த நோக்கத்தில், மாதந்ேதாறும் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
பெண் குழந்தைகள் மீது எப்போதும் அக்கறையும், அன்பும் கொண்டவர் அமைச்சர் எ.வ.வேலு. அதனால்தான், தன் வீட்டு மகள்களாக கருதி இந்த வளைகாப்பு விழாவை மாதந்தோறும் நடத்துகிறார். அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்தியதன் மூலம் 600 சுக பிரசவங்கள் நிகழ்ந்திருக்கிறது. பிரசவம் இலவசம், தாய்-சேய் நலன் சிகிச்சை இலவசம் என சிறப்பான சேவையை செய்து வருவது பாராட்டுக்குரியது.
எவ்வித பொருளாதார, சமூக பின்னணியும் இல்லாத சாதாரண எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த என்னை மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் உயர்த்தியிருக்கிறது திமுக. என்னுடைய வளர்ச்சியில் எப்போதும் அமைச்சர் எ.வ.வேலு அக்கறை கொண்டிருக்கிறார்.1989ம் ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பேறுகால உதவித்தொகை வழங்கியவர் கலைஞர். இப்போது, அவரது வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 18 ஆயிரம் வழங்கி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார். விழா ஏற்பாடுகளை, மேற்பார்வையாளர்கள் எம்பி சி.என்.அண்ணாதுரை, முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன், எம்எல்ஏ மு.பெ.கிரி, பிரியாவிஜயரங்கன், இல.குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், பகுதி செயலாளர்கள் குட்டி புகழேந்தி, சி.சண்முகம், டிவிஎம் நேரு, ஏ.ஏஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
