நாளை தமிழர் திருநாள் கொண்டாட்டம் விழுப்புரத்தில் பொங்கல் பண்டிகை பொருட்கள் விற்பனை களைகட்டியது

*போக்குவரத்து நெரிசல்-போலீசார் கண்காணிப்பு

விழுப்புரம் : விழுப்புரத்தில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சாலைகளில் டிராபிக் ஜாம் ஏற்பட்டன.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நாளை (15, 16ம் தேதி) வெகு விமரிசையாக கொண்டாட உள்ளனர். பொங்கல் பண்டிகை அதற்கு மறுநாள் உழவர் திருநாள், காணும் பொங்கல் என்று அடுத்தடுத்து தமிழர் திருநாளை கொண்டாட உள்ளனர்.

இதற்காக இன்று முதலே தமிழக அரசு 5 நாட்கள் பொங்கல் விடுமுறை அளித்துள்ளது. இதனால் வெளியூர்களில் இருப்பவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. புத்தாடைகள் வாங்குவதற்கும், பொங்கலிட்டு படையலுக்கு தேவையான பொருட்களை வாங்கவும் பொதுமக்கள் கூட்டம் விழுப்புரம் நகரில் நேற்று முதல் அலைமோதியது.

இதற்காக விழுப்புரம் நகரில் பிரதான சாலைகளான பாகர்ஷா வீதி, திருவிக வீதி, எம்.ஜி.ரோடு உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டன. பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் பெறும் மண்பானைகள், பன்னீர் கரும்புகள், மஞ்சள் கொத்து மற்றும் மாட்டு பொங்கலன்று மாடுகளை அலங்கரிக்கும் பொருட்கள், கொம்புகளுக்கு தேவையான வர்ணம் மற்றும் வீடுகளை அலங்கரிக்கும் தோரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றன.

நியாய விலைக்கடைகளில் பன்னீர் கரும்புகள் இலவசமாக வழங்கினாலும் பொதுமக்கள் காசு கொடுத்தும் கடை வீதிகளில் உள்ள பன்னீர் கரும்புகளை வாங்கிச் சென்றனர். ரூ.50 முதல் உயரத்திற்கேற்ப ரூ.100 வரை கரும்புகள் விற்பனை செய்யப்பட்டன.

அதேபோல், சிறுவள்ளி கிழங்குகள், காய்கறிகள் உள்ளிட்டவைகள் விற்பனையும் அமோகமாக நடைபெற்றன. இதனிடையே கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பிரதான சாலைகளில் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

ஹவுஸ்புல்லாக செல்லும் ரயில், பேருந்துகள்

பொங்கல் பண்டிகைக்கு இன்று முதல் 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நேற்று முதலே சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில், பஸ்கள் அனைத்தும் ஹவுஸ்புல்லாகவே சென்றன.

அதேபோல் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி, மதுரை, சேலத்துக்கு இயக்கப்படும் பேருந்துகளில் முண்டியடித்துக்கொண்டு பொதுமக்கள் ஏறிச்சென்றனர். இதனிடையே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக மேம்பாலம் நடைபெறும் பகுதிகளில் போலீசார் போக்குவரத்து சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

Related Stories: