பொங்கல் பண்டிகை களை கட்டியது கரும்பு, மஞ்சள் விற்பனை அமோகம்

*பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதல்

தர்மபுரி : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் கரும்பு, மஞ்சள், காப்பு கட்டும் பூ உள்ளிட்டவை விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக்காக சொந்த ஊர் திரும்பிய மக்களால் பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை போகி பண்டிகையுடன் இன்று(14ம் தேதி) தொடங்குகிறது. நாளை(15ம் தேதி) பிரதான பண்டிகையான சூரியப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள்(16ம் தேதி) மாட்டுப்பொங்கல் விழாவும், 17ம் தேதி காணும்பொங்கலும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில், உள்ள அனைத்து உழவர்சந்தை, தினசரி சந்தை, வாரச்சந்தைகள் உள்ளிட்டவைகளில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பானை விற்பனை உச்சத்தில் உள்ளது. பானையை பொறுத்தவரை ரூ.200 முதல் ரூ.1000 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அளவை பொருத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது.

பொங்கல் விழா பூஜையில் முக்கிய இடம்பெறும் கரும்பு, மஞ்சள்கொத்து விற்பனை சூடுபிடித்துள்ளது. பென்னாகரம் ரோடு, திருப்பத்தூர் ரோடு, சேலம் மெயின்ரோடு, கிருஷ்ணகிரி சாலைகளில் கரும்பு, மஞ்சள், காப்பு கட்டும் பூக்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி, ஏ.ஜெட்டிஅள்ளி, பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு, அரூர் உழவர் சந்தைகளிலும் கரும்பு, மஞ்சள், காப்பு கட்டு பூக்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தற்போது விலை சற்று அதிகரித்துள்ளது.

ரகத்திற்கேற்ப ஒருஜோடி கரும்பு ரூ.120 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் கொத்து ரூ.50 முதல் ரூ.60 வரையிலும் விற்கப்படுகிறது. காப்பு கட்டு பூ ரூ.20க்கு விற்கப்படுகிறது. இதேபோல், வெல்லம், கோலப்பொடிகள், பூஜை பொருட்கள், மாட்டு கொம்புகளுக்கு தீட்டப்படும் வண்ண பெயிண்டுகள் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பொருட்களை மக்கள் குடும்பமாக வந்து கூட்டம் கூட்டமாக வாங்கி செல்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி மலர் மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. சாமந்தி ரூ.150 வரையும், குண்டு மல்லி ரூ.1500க்கும் விற்பனை செய்யப்பட்டது. சந்தை மற்றும் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளது. பெங்களூரு, சென்னை, கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் குடும்பத்துடன் தங்கியிருந்து பணியாற்றி வருவோர், பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த கிராமங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால், பெங்களூருவில் இருந்து தர்மபுரி வழியாக இயக்கப்படும் ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

குடும்பம் குடும்பமாக வந்து தர்மபுரி ரயில்நிலையத்தில் இறங்கி சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்ற வண்ணம் உள்ளனர். சென்னையில் இருந்து மொரப்பூர் வழியாகவும், சேலத்தில் இருந்து மொரப்பூர் வழியாகவும் இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இறங்குகின்றனர்.

மொரப்பூர், பொம்மிடி ரயில்நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தர்மபுரி ரயில் நிலையத்தில் பயணிகள் அதிகளவில் வந்து இறங்குவதால் போலீஸ் எஸ்ஐ ரமேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், தர்மபுரி நகரம் மற்றும் புறநகர் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பெங்களூரில் இருந்து வந்த பஸ்கள் மற்றும் சேலத்தில் இருந்து வந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.அதேபோல், தர்மபுரி மாவட்டத்தில் வேலை செய்யும் நபர்கள் சொந்த ஊருக்கு பொங்கல் விழா கொண்டாட குடும்பத்துடன் சென்ற வண்ணம் உள்ளனர்.

இதனால் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தர்மபுரி நகரில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் பஸ்களில் மக்கள் கூட்டமாக இருந்தது. இதனால், பஸ்களில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். கூட்ட நெரிசலை தவிர்க்க தர்மபுரி மண்டலத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தர்மபுரி வழியாக செல்லும் ரயில், பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Related Stories: