எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு; சிங்கிளாக டீ ஆத்தும் ஓபிஎஸ் ‘மிங்கிள்’ ஆவாரா? முடிவுக்கு வரும் 50 ஆண்டு அரசியல் ஆட்டம்

தேனி: விவசாய குடும்ப பின்னணி, டீக்கடை உரிமையாளர் என்ற நிலையில் இருந்து, தேனி மாவட்ட அதிமுகவில் சாதாரண கட்சி உறுப்பினராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். பின் படிப்படியாக வளர்ந்து பெரியகுளம் நகராட்சி தலைவர், எம்எல்ஏ, அமைச்சர், துணை முதல்வர் மற்றும் முதல்வர் என அரசியல் சதுரங்க ஆட்டத்தில் உச்சத்தை தொட்டார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருக்கிறார். மிகவும் அமைதியானவர்.

பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருக்கும் வரை அவரது சொல்லை தட்டாதவர், விசுவாசமிக்கவர் என்ற நற்பெயர் அவருக்கு உண்டு. கடந்த 2001ம் ஆண்டு டான்சி வழக்கில் சிக்கியதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து பிரச்னை தராத ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்ற சூழல் அதிமுகவில் ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதாவால் டிக் அடிக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அதன்பிறகு அவருக்கு ஏறுமுகம்தான். முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் கூட தன்னை முதல்வர் என கூறிக் கொள்ள மாட்டார்.

சட்டசபையில் ஜெயலலிதா அமர்ந்த இடத்தில் அமரவில்லை. அந்தளவுக்கு தீவிர விசுவாசம் காட்டினார். இதன் விளைவு கட்சியில் கிட்டத்தட்ட 2ம் இடத்துக்கு முன்னேறினார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கியது. இதனால் ஜெயலலிதா சிறைக்கு சென்றார். இம்முறையும் ஓபிஎஸ்சையே முதல்வர் பதவி தேடி வந்தது. ஜெயலலிதா விடுதலையானதும் பொறுப்பை ஒப்படைத்து பழைய விசுவாசியாக மாறினார்.

இடையில் ஜெயலலிதாவோடு சில கருத்து பேதம் இருந்தாலும், பின்னர் சமரசமானார். ஜெயலலிதா இறந்த பின்னர் இவரே 3வது முறையாகவும் முதல்வர் பதவியை ஏற்றார். ஆனால், அது நெடுநாட்கள் நீடிக்கவில்லை. சசிகலாவின் முதல்வர் ஆசையால் பதவி விலகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா சமாதி முன் தர்மயுத்தம் நடத்தினார். இதுவே அவரது அரசியல் பயணத்தை மாற்றியமைத்தது.

காலச்சூழலில் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அவரை ஏற்க மறுத்து ஒரு கட்டத்தில் அதிமுகவுக்கு எதிராகவே போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டார். பின்னர் எடப்பாடியுடன் இணக்கமாகி துணை முதல்வராக இருந்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தவுடன், எடப்பாடியுடன் ஒத்துப்போக முடியாமல் பிரிந்து சென்றார். ஜெயலலிதா இருந்தவரை கட்சியில் அவருக்கு அடுத்தபடியான முக்கிய இடத்தில் இருந்தவர், இன்றைய அரசியலில் தன்னை தக்கவைத்துக் கொள்வதற்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதிமுகவில் இணைப்பு சாத்தியமற்ற நிலையில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை நடத்தி, தனது பலத்தை காட்டுவதற்காக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார். மீட்பு குழுவை கழகமாக மாற்றியுள்ள ஓபிஎஸ், இந்த தேர்தலில் தனது இருப்பை தக்கவைக்காவிட்டால், எதிர்கால அரசியல் கேள்விக்குறியாகும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அவரது ஆதரவாளர்கள் பலரும் அணிமாறத் துவங்கியுள்ள நிலையில் தான் மட்டுமின்றி, தனது மகன், தனது ஆதரவாளர்கள் என ஒரு கூட்டத்தையே சேர்த்து கரைசேர்க்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. டிடிவி.தினகரனும், ஓபிஎஸ்சும் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், இருவரையும் பிரிக்கும் சூழ்ச்சியில் எடப்பாடி தரப்பு ஈடுபடுவதாக வருத்தமும் அவரை வாட்டுகிறதாம். ஒருவேளை எடப்பாடியின் பிரித்தாளும் சூழ்ச்சி ஒர்க் அவுட் ஆனால், தனது நிலை என்னாகும் என்ற பயமும் சமீபமாக அவருக்கு வந்துள்ளதாம்.

இது அவரை நம்பி இன்னும் அவருடன் வலம் வருவோருக்கும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வரவுள்ள சட்டமன்ற தேர்தல் யாருக்கு முக்கியமோ, இல்லையோ ஓபிஎஸ்சிற்கு ரொம்பவே முக்கியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சரியான முடிவு எடுத்து, தனக்கான இடத்தை காட்டாவிட்டால் தனது அரை நூற்றாண்டு அரசியல் பயணத்திற்கு எண்ட் கார்டு போடும் நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதனால், எப்படியாவது தனது அரசியல் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாய நிலையில் அவரது அன்றாட அரசியல் நகர்ந்து வருகிறது. கூட்டணி குறித்தும் முடிவெடுக்க முடியாத நிலையில், ஆதரவாளர்களின்றி தனது அரசியல் கடையில் சிங்கிள் ஆக டீ ஆத்திக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். தேர்தலில் யாருடனாவாவது ‘மிங்கிள்’ ஆவாரா? அவரது எதிர்காலத்திட்டம் என்ன என்பது தெரியாமல் அவரது ஆதரவாளர்களே குழம்பிப் போய் உள்ளனர்.

Related Stories: