நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக ஆயுஷ் பதோனி இந்திய அணியில் சேர்ப்பு!

குஜராத்: இடுப்பு வலி காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக ஆயுஷ் பதோனி இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

வதோதராவில் கடந்த ஜனவரி நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது, இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பந்துவீசிக் கொண்டிருந்தபோது இடது விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

அந்தப் போட்டியில் அவர் 5 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்த நிலையில், வலியையும் பொருட்படுத்தாமல் 8-வது வீரராகக் களமிறங்கி 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினும், பிசிசிஐ மருத்துவக் குழுவின் பரிசோதனைக்குப் பிறகு, அவர் மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன் சுந்தர் விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் அயுஷ் பதோனி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பதோனி இதுவரை 21 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 4 சதங்களுடன் 1681 ரன்களும், 22 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். அதேபோல், 27 ‘பட்டியல் ஏ’ போட்டிகளில் 693 ரன்களும், 18 விக்கெட்டுகளும் எடுத்துள்ள அவரது திறமையை நம்பி பிசிசிஐ இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.

இந்தத் தொடர் தொடங்கியது முதலே இந்திய அணி காயங்களால் தவித்து வருகிறது. ஏற்கனவே விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியிருந்த நிலையில், இப்போது வாஷிங்டன் சுந்தரும் வெளியேறியிருப்பது அணிக்கு பெரும் சோதனையாக அமைந்துள்ளது. திலக் வர்மா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத சூழலில், இளம் வீரர் அயுஷ் பதோனி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Related Stories: