நவிமும்பை: டெல்லி அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் நேற்று, குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவரில் 209 ரன் குவித்து ஆல் அவுட்டானது. நவி மும்பையில் நேற்று நடந்த மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யுபிஎல்) டி20 போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் மகளிர் – டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, முதலில் களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க வீராங்கனைகளில் ஒருவரான பெத் மூனி 19 ரன்னில் அவுட்டானார். மற்றொரு துவக்க வீராங்கனை சோபி டிவைன் 42 பந்துகளில் 8 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் விளாசினார்.
பின் வந்தோரில் ஜார்ஜியா வாரெம் 3, அனுஷ்கா சர்மா 13, பார்தி புல்மாலி 3 ரன்னில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இருப்பினும், கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் சிறப்பாக ஆடி 26 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 49 ரன் விளாசினார். அதன் பின் வந்தோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். குஜராத் அணி 20 ஒவரில் 209 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டெல்லி அணி தரப்பில் நந்தினி சர்மா கடைசி ஓவரில் வீழ்த்திய 4 விக்கெட்டுகளுடன் சேர்த்து 5 விக்கெட் சாய்த்தார். தவிர, சரணி, சினெலி ஹென்றி தலா 2, ஷபாலி வர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, டெல்லி அணி, 210 ரன் இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.
