பெங்களூரு: பெங்களூருவில் தீ விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட மென்பொருள் பொறியாளர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமமூர்த்தி நகர், சுப்பிரமணியா லேஅவுட் பகுதியில் வசித்து வந்தவர் ஷர்மிளா குஷாலப்பா (34). மென்பொருள் பொறியாளரான இவர், கடந்த 3ம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்தபோது இரவு 10.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அவர் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்றும், மின் கசிவு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்றும் ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.
இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஷர்மிளாவின் காணாமல் போன செல்ேபானை ஆய்வு செய்ததில், அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த கர்னல் குர் (18) என்ற பிளஸ் 2 மாணவன் அதை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் ஜன்னல் வழியாக ஷர்மிளாவின் வீட்டிற்குள் நுழைந்த அந்த மாணவன், அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளான். அதற்கு ஷர்மிளா எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை பலாத்காரம் செய்து அவரை மூச்சுத் திணறடித்து கொலை செய்துள்ளான்.
பின்னர் கொலையை மறைப்பதற்காக, படுக்கையறையில் இருந்த துணிகளுக்குத் தீ வைத்துவிட்டு, இது ஒரு விபத்து போல சித்தரித்து அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த மாணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
