மாதவரத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் 5800 பேருக்கு பட்டா: சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார்

மாதவரம்: மாதவரத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் 5800 பேருக்கு பட்டாக்களை சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார். மாதவரம் தொகுதிக்குட்பட்ட மண்டலம் 2, வார்டு 19, மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் பல ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 5800 பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவ்வாறு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பட்டா வழங்குவதற்கான அளவீடு மற்றும் ஆவணம் சரி பார்ப்பு பணி கடந்த சில தினங்களாக நடந்து வந்தது.

தற்போது பணிகள் முடிவடைந்ததை அடுத்து தகுதியான அனைவருக்கும் பட்டா வழங்கும் நிகழ்ச்சி மாத்தூர் எம்எம்டிஏ 2வது பிரதான சாலையில் நடந்தது. கவுன்சிலர் காசிநாதன் தலைமை வகித்தார். சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ 5800 பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

20 ஆண்டுகளாக கொடுக்கப்பட்டு வந்த கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கும், அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏவிற்கும் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாதவரம் கோட்டாட்சியர் பெருமாள், தாசில்தார் அருள்ஜோதி, மண்டல குழு தலைவர்கள் ஏ.வி.ஆறுமுகம், நந்தகோபால், பகுதி திமுக செயலாளர் புழல் நாராயணன், வார்டு செயலாளர் தாமரைச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: