அடுத்த தலைமுறைக்கு எண்ணற்ற வாய்ப்புகள் கிடைக்க திராவிட இயக்கமும், பெரியாரும்தான் காரணம்: நூல் வெளியீட்டு விழாவில் கனிமொழி எம்பி பேச்சு

சென்னை: நமது அடுத்த தலைமுறைக்கு எண்ணற்ற வாய்ப்புகள் கிடைக்க காரணம் திராவிட இயக்கமும், பெரியாரும் தான் என்று கனிமொழி எம்பி கூறினார். பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் அறிஞர் ஆனைமுத்து நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு நூல் வெளியீட்டு விழா நேற்று திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் நடந்தது.

இதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி கலந்துகொண்டு, ‘ஆனைமுத்து 100’ நூலை வெளியிட்டார். முதல் நூலை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் பெற்றுக்கொண்டார். விழாவில் கனிமொழி எம்பி பேசியதாவது: இன்னும் சில நாட்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. 14ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதற்கு பிறகு, ஒரு வாரம் சென்னை முழுவதும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அதில் பல ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பணிகள் எனக்கு இருக்கிறது. அதே நேரத்தில், தேர்தல் பணிகளும் துவங்கி இருக்கிறது. அதோடு, தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டிய அந்த பணியும் இருக்கக்கூடிய ஒரு இக்கட்டான நிலையில்தான், நான் இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் என்னைக் கேட்டவுடன் ஒப்புக்கொண்டேன்.  நான் ஒப்புக்கொண்டதற்கு காரணம், இந்த நூல் ஆனைமுத்து ஐயாவை பற்றிய நூல் என்ற ஒரே காரணம்தான்.

கலைஞர் சொல்லுவார், “எங்கள் வீட்டில் எல்லோரும் திமுக என்றால், கனிமொழி மட்டும் திராவிட கழகம்” என்று. பெரியாரின் சிந்தனைகளை இந்த உலகத்துக்கே எடுத்துச் சென்ற ஆனைமுத்து ஐயாவை பற்றிய நூல் வெளியீடு என்றால், அதற்கு முன் வேறு எந்த பணியையும் நான் வைத்துப் பார்க்க முடியாது. நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்று பலரும், படித்தவர்களாகவும், பட்டம் பெற்றவர்களாகவும், இந்தச் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களாகவும், நமது அடுத்த தலைமுறைக்கு எண்ணற்ற வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய நிலைமையில் நின்றிருக்கிறோம் என்றால், அதற்கு காரணம் திராவிட இயக்கமும், பெரியாரும் தான். பெரியாரின் வாழ்க்கை முழுவதும் செய்த பயணங்கள், எழுத்துகள், சிந்தனைகள், பேச்சுகள். இவை அனைத்தையும் ஒரே மனிதர், கிட்டத்தட்ட இருபதாயிரம் பக்கங்களுக்கு மேல் தொகுத்துள்ளார்.

இன்று நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய சமூக நீதியின் ஒவ்வொரு கட்டத்திற்கும் பின்னால் நின்று இயக்கி, போராடி, ஒரு மிகப்பெரிய சக்தியாக இருந்தவர் ஆனைமுத்து. ஆனால், அதனை அவரும் கொண்டாடிக் கொள்ளவில்லை; நாமும் அதனைச் செய்ததில்லை.

ஆனால், இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் எத்தனையோ உரிமைகளுக்கும், வாய்ப்புகளுக்கும் முதுகெலும்பாக நின்றவர் அவர்.இவ்வாறு அவர் பேசினார். விழாவில் நூலின் பதிப்பாசிரியர் இரா.பச்சமலை, அறக்கட்டளையின் செயலாளர் துரை.கலையரசு, மா.பெ.பொ.க செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் தி.ச.குணசேகரன் மற்றும் ஆனைமுத்து குடும்பத்தினர் பங்கேற்றனர்.

Related Stories: