சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு எம்ஜிஎம் பீச் ரிசார்ட் அருகே நடந்த இந்தியாவின் முதல் ‘ஐயன்மேன் டிரையத்லான் சென்னை மற்றும் டுயோஸ்கா டூயத்லான்’ போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சர்வதேச அளவில் பிரபலமான ஒலிம்பிக் தூரத்தை (51.50 கி.மீ) அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து அயர்ன்மேன் அமைப்பு நடத்தியது.
5 கிமீ ஓட்டம், 40 கி.மீ சைக்கிள் பயணம், 10 கி.மீ ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கி நடந்த போட்டியில் 40 கி.மீ. தூரம் கொண்ட சைக்கிளிங் போட்டி கோவளம் பீச் முதல் நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் வழியாக எம்.ஜி.எம். பீச் ரிசார்ட் வரை நடந்தது. 10 கி.மீ தூரம் கொண்ட ஓட்டப்பந்தயம் எம்.ஜி.எம். பீச் ரிசார்ட் முதல் கிழக்கு கடற்கரை சாலையில் மாயாஜால் வரை 51.50 கி.மீ தூரத்திற்கு நடந்தது.
சென்னையின் விளையாட்டு ஆர்வத்தை பறைசாற்றும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்பட உலகம் முழுவதிலுமிருந்து 529 வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். 83 வீராங்கனைகள் மற்றும் 17 சர்வதேச வீரர்கள் அடங்குவர். ஆசிய அளவில் அயர்ன்மேன் டிரையத்லான் போட்டியை நடத்தும் 3வது நாடு இந்தியா ஆகும். அதேவேளையில் உலகின் 6வது நாடாகவும் இந்தியா உள்ள நிலையில் கடினமான ‘அயர்ன்மேன் 70.3’ மற்றும் முழு தூர அயன்மேன் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் வீரர்களுக்கு இப்போட்டி ஒரு சிறந்த நுழைவு வாயிலாக அமைந்தது.
மேலும் டிரையத்லான் தவிர, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ‘டுயோஸ்கா டூயத்லான்’ (ஓட்டம் மற்றும் சைக்கிளிங் மட்டும்) மற்றும் 6-16 வயதுடைய சிறுவர்களுக்கான ‘அயர்ன்கிட்ஸ்’ பந்தயங்களும் நடந்தன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் எல்.இதயவர்மன், செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, சார் ஆட்சியர் மாலதி ஹெலன், திருப்போரூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பையனூர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
