சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து, கோயில் பிரசாதம் என கூறி மயக்க பால்கோவை கொடுத்து 27சவரன் நகைகளை திருடிய பெண்ணை போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கைது செய்தனர். ஆன்லைனில் பணத்தை இழந்ததால் அவர் கொள்ளைக்காரியாக மாறியது தெரிய வந்தது.
சென்னை திருவல்லிக்கேணி சின்னப்பா தெருவை சேர்ந்தவர் மாலத்திரி (44). இவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி சுஜாதா வீட்டில் இருந்தபடியே டெய்லரிங் தெழில் செய்து வருகிறார். கடந்த 7ம் தேதி கடையில் இருந்து அவரது கணவர் மாலத்திரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி சுஜாதா மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அவர், அதிர்ச்சியில் மனைவி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி உள்ளார்.
அப்போது அவர் உங்களுக்கு தெரிந்த பெண் ஒருவர் வந்து, கோயில் பிரசாதம் என ‘பால்கோவா’ கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை என கூறி உள்ளார். பிறகு தனது மனைவி கழுத்தில் அணிந்து இருந்த 6 சவரன் செயின் எங்கே என்று மாலத்திரியன் கேட்டுள்ளார். அப்போது தான் சுஜாதாவுக்கு மயக்க பால்கோவாவை கொடுத்துவிட்டு நகைகளை அந்த பெண் திருடி சென்றது தெரியவந்தது. உடனே சம்பவம் குறித்து மாலத்திரியன் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி போலீசார் சின்னப்பா தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்திய போது, திருவல்லிக்கேணி அரிசி மண்டி தெருவை சேர்ந்த ஆர்னிப்பள்ளி ரவணம்மா (34) என தெரியவந்தது. ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்து சென்னை வந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, போலீசார் அதிரடியாக ரவணம்மாவை பிடித்து விசாரணை நடத்திய போது, ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட ரவணம்மா, ஒரு கட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இழந்த பணத்தை மீட்க அவர் பல இடங்களில் பணம் கடன் கேட்டுள்ளார். யாரும் பணம் கொடுக்காததால், நூதன முறையை கையாண்டு வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு கோயில் பிரசாதம் என ‘மயக்க பால்வோகா’ கொடுத்து அவர்கள் அணிந்துள்ள நகைகளை திருடி வந்தது தெரியவந்தது.
அந்த வகையில் திருவல்லிக்கோணி பகுதியை சேர்ந்த கொடியரசி என்பவரிடம், ரவணம்மா இதுபோல் 21 சவரன் நகைகள் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அதிரடியாக ரவணம்மாளை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து 19.5 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. மேலும், இதுபோல் வேறு பெண்களிடம் நகைகள் பறித்துள்ளாரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
